சுவிட்சர்லாந்தில் ஓடும் ரயிலில் பிரித்தானியர் ஒருவரின் சூட்கேசை சோதனையிட்ட அதிகாரிகள், அதற்குள் தடை செய்யப்பட்ட விலங்கு ஒன்றின் மாமிசம் இருந்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.
தெற்கு சுவிட்சர்லாந்திலுள்ள Brigஇல் இரவு ரயிலில் பயணித்த அந்த நபரின் சூட்கேசில், 23 கிலோ antelope என்னும் மறிமானின் மாமிசம் இருந்தது. அந்த உறையவைக்கப்படாத, சுடப்பட்ட மாமிசம் தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கிறது.
அந்த 59 வயது மனிதர் வெனிசிலிருந்து பாரீஸ் செல்லும் ரயிலில் பயணித்துள்ளார், அவர் கடைசியாக செல்ல திட்டமிட்டிருந்த இடம், லண்டன்.
அந்த மாமிசம் பல கவர்களில் அடைக்கப்பட்டு சூட்கேசில் வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதை உண்ணுவது மனிதர்களுக்கானாலும் சரி, விலங்குகளுக்கானாலும் சரி, மோசமான தீங்கை ஏற்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மாதிரி சட்ட விரோதமாக கொண்டு செல்லப்படும் மாமிசம் பெரும்பாலும், மறிமான்கள், குரங்குகள் மற்றும் எறும்புத்தின்னிகள் போன்ற பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் மாமிசமாகவே இருப்பதாக நம்பப்படுகிறது.
அந்த நபர், அழிந்துவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தை மீறியுள்ளதால், ஃபெடரல் உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடைகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.