இருளில் மூழ்கவிருக்கும் ஜெனீவா: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில் உள்ள 150 நகராட்சிகள் ஒருநாள் இரவு முழுவதும் முக்கிய நோக்கத்திற்காக இருளில் மூழ்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மின் விளக்குகளால் ஏற்படும் தூய்மைக்கேடு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என ஒருங்கிணைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மொத்தமுள்ள 209 நகராட்சிகளில் 149 நகராட்சிகள் இதுவரை பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் இந்த முயற்சிக்கு எவரையும் கட்டாயப்படுத்தவில்லை என ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு முழுவதும் குறிப்பிட்ட நகராட்சிகளில் மின் விளக்குகள் எரியாது என தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள ஒரு மில்லியன் குடியிருப்பாளர்கள், அந்த ஒரு இரவும் இயற்கையின் அழகை ரசிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த முனைப்பை ஜெனீவாவின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், ஜெனீவாவின் வானியல் சங்கம் மற்றும் House of Salève ஆகிய அமைப்புகள் முன்னெடுத்துள்ளன.

1960 காலகட்டத்தில் நீர் மாசு தொடர்பிலும் 2000 ஆண்டு காலகட்டத்தில் காற்று மாசு தொடர்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது போன்று தற்போது மின் விளக்கு தூய்மைக்கேடு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயம் என ஒருங்கிணைப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டுமின்றி குடியிருப்புகளில் மின் விளக்குகளை அணைக்க அறிவுறுத்தவில்லை என கூறும் ஒருங்கிணைப்பாளர்கள் ஆனால், பொதுமக்கள் விரும்பினால் தங்கள் குடியிருப்பில் உள்ள மின் விளக்குகளையும் இந்த ஒரு இரவு மட்டும் அணைக்கலாம் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே இந்த சிறப்பு ஏற்பாடு தொடர்பில் பொலிசார் அதிக அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் எந்த மின் விளக்குகளும் எரியாது என்பதால் குற்றச் செயல்களுக்கு வாய்ப்பு அமையலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

சமீப ஆண்டுகளாக குறிப்பிட்ட சில நகராட்சிகள், வீதிகளில் உள்ள மின் விளக்குகளை அதிக நேரம் எரியவிடாமல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்