ஓன்லைன் காதலா? கவனம்: எச்சரிக்கும் சுவிஸ் பொலிசார்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஓன்லைனில் சந்திப்பவர்கள் மீது குறுகிய காலகட்டத்திலேயே காதல் வயப்படுவதும், பின்னர் ஏமாறுவதும் தற்போது சகஜமாகிவிட்டது.

இந்நிலையில் ஓன்லைன் காதலர்கள் என்ற பெயரில் பண மோசடியில் ஈடுபடுபவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி சுவிஸ் பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள்.

சுவிஸ் பொலிசாரும் குற்ற தடுப்பு ஏஜன்சியும் இணையத்தில் காதல் என்ற பெயரில் ஏமாற்றுவோரிடம் இருந்து பொதுமக்களை எச்சரிப்பதற்காக பிரச்சாரம் ஒன்றை துவங்கியுள்ளனர்.

2018ஆம் ஆண்டில் மட்டும் 16,000பேர் இணைய காதல் என்ற பெயரில் மோசடிக்கு ஆளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.

எனவே இணையத்தில் உங்களுக்கு காத்திருப்பது காதலா அல்லது ஊழலா என்பதை எப்படி கண்டுபிடிப்பது, அதிலிருந்து தப்புவது எப்படி என்பது தொடர்பாக ஆலோசனை அளிப்பது இந்த பிரச்சாரத்தின் நோக்கம் ஆகும்.

போலியான பெயர், புகைப்படம் போன்ற அடையாளங்களுடன் இணையத்தில் உலாவும் இத்தகைய மோசடிக்காரர்களுக்கு, தாங்கள் சந்திப்பவர்களுடன் சீக்கிரம் காதல் வந்துவிடும்.

பின்னர் எப்படியாவது நேரில் சந்திக்க துடிப்பதுபோல் ஒரு மாயையான தோற்றத்தை உருவாக்குவார்கள்.

ஆனால், என்றைக்கு சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்களோ, அதற்கு முன் தினம் திடீரென அவருக்கு ஏதாவது விபத்து நடந்துவிடும், அல்லது அவர்களை யாராவது கொள்ளை அடித்து விடுவார்கள் அல்லது திடீரென அவர்களுக்கு உடல் நலமில்லாமல் போய்விடும்.

உடனே சிக்கலில் இருருப்பதாகக் கூறி பண உதவி கேட்பார்கள், அதுவும் ஓன்லைன் பணப்பரிமாற்றமாகத்தான் இருக்கும். நேரில் சந்திப்பது மட்டும் நடக்கவே நடக்காது!

எனவே இத்தகைய சம்பவங்கள் உங்கள் ஓன்லைன் காதலில் ஏற்பட்டால் கவனமாக இருங்கள் என எச்சரிக்கிறது சுவிஸ் பொலிஸ் மற்றும் குற்ற தடுப்பு ஏஜன்சி.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்