சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த முதல் பட்டியல் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டது!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து அரசு, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த பட்டியலை முதன் முறையாக இந்திய அரசிடம் வழங்கியுள்ளது.

வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கமாக கருதப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் ஏராளமான இந்தியர்கள், வரி ஏய்ப்பு செய்து கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியது.

அதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து நாட்டு உதவியுடன், அந்நாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் ஒன்றை சுவிட்சர்லாந்துடன் இந்தியா செய்துகொண்டது.

அதைத் தொடர்ந்து முதல்கட்ட விவரங்களை இந்திய அரசிடம் பகிர்ந்து கொள்வது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த கடந்த மாதம் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு குழு இந்தியா வந்தது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து அரசு நேற்று சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை முதன் முறையாக இந்தியாவுக்கு அளித்துள்ளது.

இந்தியாவுக்கு கிடைத்துள்ள அந்த பட்டியலில் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர், கணக்கு எண், நிதி பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன.

கறுப்புப் பணத்தை தடுக்கும் வகையில், இந்தியா, சுவிட்சர்லாந்து அரசுகளுக்கு இடையே தாமாக முன்வந்து கணக்கு விவரங்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானபின், இந்திய அரசுக்கு கிடைத்துள்ள முதல் பட்டியல் இதுவாகும். இரண்டாவது பட்டியல், வரும் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிடைக்கும்.

சுவிட்சர்லாந்தின் வரி நிர்வாகத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், ’இந்தியா உட்பட 75 நாடுகளுடன் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு வங்கி கணக்குகள் மற்றும் பிற தகவல்களை சுவிட்சர்லாந்து அரசு பகிர்ந்து கொண்டுள்ளது, ஆனால் இந்த தகவல்கள் முழுவதும் ரகசியமானவை’ என்றார்.

இந்த விவரங்களை பெற்றிருப்பதன் மூலம், கறுப்பு பணம் தொடர்பான வழக்குகள், வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்துள்ளவர்கள், கணக்கில் வராத சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோர் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க முடியும்.

பெரும் தொழிலதிபர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்த பட்டியலில் அதிகமாக உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த நடவடிக்கைகள் தொடங்கியதை அறிந்த பலர், தங்கள் கணக்குகளை மூடி விட்டதாக அஞ்சப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்