சூடு பிடிக்கும் இலங்கை சுவிஸ் தூதரக விவகாரம்: மாகாண செயலர் தலையீடு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக அலுவலர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், சுவிஸ் மாகாண செயலர் தலையிட்டுள்ளதையடுத்து விடயம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக அலுவலர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சுவிஸ் மாகாண செயலரான Pascale Baeriswyl, பெர்லினில் இருக்கும் சுவிட்சர்லாந்துக்கான இலங்கை தூதரான Karunasena Hettiarachchiயை, பெர்னுக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளார்.

திங்களன்று, சட்டப்படி இந்த விடயத்தை குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு சுவிட்சர்லாந்து ஆதரவளிப்பதாக கூட்டம் ஒன்றில் Baeriswyl ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

என்றாலும், உடல் நல பிரச்சினைகள் காரணமாக சம்பந்தப்பட்ட தூதரக ஊழியரை இதுவரை விசாரிக்க முடியவில்லை என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 25ஆம் திகதி, கார் ஒன்றிற்குள் வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டு, கொழும்பிலுள்ள ஒரு தெருவில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் மிரட்டப்பட்ட சுவிஸ் தூதரக பெண் ஊழியர் ஒருவர், சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ள இலங்கை குடிமக்களின் மொபைல் போன் விவரங்களை அளிக்குமாறு மிரட்டப்பட்டதாகவும் பின்னர், இரண்டு மணி நேரத்திற்குப்பிறகு அவர் விடுவிக்கப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இந்த விடயம் குறித்து, சுவிஸ் தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு புகார் அளித்ததோடு, முழுமையான மற்றும் விரைவான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டிருந்தது.

இலங்கை அதிகாரிகள் விசாரணையை தாமதப்படுத்துவதில் சுவிட்சர்லாந்துக்கு எந்த விருப்பமும் இல்லை என்பதை இலங்கை தூதருக்கு தெரிவித்துள்ள Baeriswyl, என்றாலும் சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தனது ஊழியர்கள் தொடர்பான பிரச்சினைகளை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

தூதரகம் கொடுத்த விடயங்கள் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றிற்கு பதிலளிக்கும் விதத்தில், அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த அறிக்கையில், நடந்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பாக பொலிசார் சாட்சியங்களை விசாரித்ததோடு, உபேர் ஆவணங்கள், CCTV காட்சிகள், தொலைபேசி சான்றுகள் மற்றும் GPS தரவுகளை ஆராய்ந்ததில், சுவிஸ் தூதரக ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் விடயங்களுக்கும் உண்மையில் நடந்த விடயங்களுக்கும் தொடர்பு இல்லை, என்பதற்கான ஆதாரங்களை சுவிஸ் தூதரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்படியானால் உண்மையான ஆதாரங்களை தம்மிடம் விவரிக்குமாறு Baeriswyl Hettiarachchiயைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers