மட்டக்களப்பு வெள்ள நிவாரணத்திற்கு சுவிஸ் கதிர்வேலாயுதசுவாமி ஆலயம் உதவி

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இயல்பு வாழ்வை இழந்த மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களின் மறுவாழ்விற்காக சுவிற்சர்லாந்து செங்காலன் சென்மார்க்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயம் நிதியுதவி வழங்கியுள்ளது.

தாயகத்தில் இன்னல்படும் உறவுகளுக்கு உதவும் ஆலயத்திட்டத்தின் கீழ் ஆலய அடியார்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் பங்களிப்புடன் ஆயிரம் சுவிஸ் பிராங் இந்த மறுவாழ்விற்கு வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்கு உதவுமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீ.யோகேஸ்வரன் விடுத்த கோரிக்கையை ஏற்று கதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகத்தினர் இந்த உதவியை வழங்கியுள்ளனர்.

இந்த நிதி பங்களிப்பு மூலம் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட சித்தாண்டி – 01 கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 330 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தினால் விவசாயம் மற்றும் அன்றாட தொழில்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி கிடைக்காத நிலையில் கதிர்வேலாயுதசுவாமி ஆலய நிர்வாகத்திடம் உதவி கோரப்பட்டிருந்தது.

ஆலயம் வழங்கிய நிதிமூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, சோயா மற்றும் சலவைத்தூள் ஆகியன அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த உதவியை வழங்கியமைக்காக கதிர்வேலாயுதசுவாமி ஆலய நிர்வாகத்திற்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கூறினார்.

இந்நிகழ்வில் கிராம அதிகாரிகளான எஸ்.சுதாகரன்,எஸ்.ரூபன்,எஸ்.துதி பேரவையின் பொருளாளர் ந.புவனசுந்தரம் பேரவை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாயகத்தில் இன்னல்படும் உறவுகளுக்கு உதவும் கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள்,மூக்குக்கண்ணாடி வழங்குதல், கல்விசார் உபகரணங்கள் வழங்குதல், கோமாதா தானம் வழங்குதல்,ஆதரவற்ற சிறார்களை பராமரித்தல் போன்ற சேவைகளுக்கு ஆலயம் தொடர்ந்து உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்