சுவிஸ் நகரங்களில் எலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள விடயம் மக்களை கவலையடைய செய்துள்ளது.
குளிர்காலத்தில் வழக்கமாக நிலவும் வெப்பத்தைவிட இம்முறை அதிக வெப்பநிலை நிலவுவது, எலிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்ததாக அமைந்துள்ளதையடுத்து எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன் வெளியான வீடியோ ஒன்றில், பல்பொருள் அங்காடி ஒன்றில் முட்டைகள் முதலான உணவுப்பொருட்களை எலிகள் சேதப்படுத்துவதைக் காணமுடிந்தது.
சூரிச் மாகாணத்தைச் சேர்ந்த எலி ஒளிப்பவர் ஒருவர் பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நவம்பரிலிருந்து எலிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும், தாங்கள் எலி ஒழிப்பு பணியில் ஒவ்வொரு நாளும் பிஸியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சூரிச்சைப் பொருத்தவரை, அங்குள்ள சாக்கடைகள் பல 100 ஆண்டு பழமையானவை என்று கூறும் அவர், குழாய்களில் உள்ள துவாரங்கள் வழியாக எலிகள் வீடுகளுக்குள் வந்துவிடுவதாகவும் தெரிவித்தார்.
சில எலி மருந்துகள் சுவிட்சர்லாந்தில் தடை செய்யப்பட்டுள்ளது ஒரு புறமிருக்க, மறுபக்கம் எலிகளும் எலி மருந்துகளை தாக்குப்பிடிக்கும் வகையில் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டன.
எனவே, சுவிட்சர்லாந்து முழுவதும் பல்லாயிரக்கணக்கான எலிப்பொறிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், எலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க டிஜிற்றல் சென்சார்களும் அமைக்கப்பட்டுள்ளன.