சுவிட்சர்லாந்தில், சாலையில் பயணிப்போருக்காகவே தனியாக ஒரு தேவாலயம் அமைக்கப்பட உள்ளது.
அன்றாட பயணம் என்பதே பல நேரங்களில் மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடியதாகிவிடும் நிலையில், அப்படி சோர்ந்து போய் பயணித்துக் கொண்டிருக்கும் போது, மனதுக்கு ஒரு இளைப்பாறுதலைத் தரும் வகையில் சுவிட்சர்லாந்தில் ஒரு தேவாலயம் அமைக்கப்பட உள்ளது.
ஆன்மாவுக்கான பெட்ரோல் நிலையம் இது, என அந்த தேவாலயத்தை வர்ணிக்கிறார் உள்ளூர் பாதிரியார் ஒருவர்.
பயணிகள் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள், மனம் வாழ்க்கைப் பயணத்தைக் குறித்து யோசிக்கிறது, அப்படிப்பட்ட நிலையில் சற்று ஓய்வாக அமர்ந்து தங்களைக் குறித்து எண்ணவும், கவலையளிக்கும் உணர்வுகளிலிருந்து விடுபடவும் இப்படிப்பட்ட இடங்கள் உதவலாம் என்கிறார் Jens Köhre என்னும் பாதிரியார்.
சிலர் கூட்டமாக அமர்ந்து பிரார்த்திக்க விரும்பமாட்டார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு தனியாக அமர்ந்து பிரார்த்திக்க இந்த இடம் மிகவும் உதவியாக இருக்கும்.

பெரும்பாலான சுவிஸ் நாட்டவர்கள் மத நம்பிக்கை அற்றவர்களாக மாறிவரும் சூழலில், யார் வேண்டுமானாலும் வந்து அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வகையில் இந்த நெடுஞ்சாலை தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதுதான்.
பேஸலின் பிரபல கட்டிட வடிவமைப்பாளர்கள் வடிவமைத்துள்ள இந்த தேவாலயம், ஒரு மனித காதின் உள்ளமைப்புக்கு ஒப்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஒன்றையொன்று தாங்கிப்பிடித்திருக்கும் நான்கு சுவர்கள், உள்ளே நுழைந்தால், நத்தையின் கூட்டைப்போல் அமைந்திருக்கும் படிக்கட்டுகள் தரைக்கடியில்
அமைந்துள்ள மூன்று சிற்றாலயங்களுக்கு கொண்டு செல்கின்றன. சாலை என்றாலே, சத்தம் இருக்கும்.

ஆனால், இந்த தேவாலயம் வடிவமைக்கப்பட்டுள்ள விதம் சத்தம் உள்ளே கேட்காத வகையில் உள்ளது.
தேவாலயத்தின் உள் அமைந்துள்ள சிற்றாலயம் ஒன்றின் ஒரு பகுதி, சுவிஸ் கிராமங்களின் பசுமைக்காட்சிகளை காணும் வகையில் கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பைபிள், சிலுவை, மெழுகுவர்த்திகள் மற்றும் ஆலயத்துக்கு பிரார்த்தனை செய்ய வருவோர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள ஒரு புத்தகம் தவிர, அந்த ஆலயத்துக்குள் படங்களோ சிலைகளோ எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. Andeer கிராமத்தையும் Chur நகரத்தையும் இணைக்கும் A13 நெடுஞ்சாலையில் இந்த தேவாலயம் அமைக்கப்பட உள்ளது.
