சீனாவுக்கு அடுத்து ஐரோப்பிய நாடுகளை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமது மகன் இலக்கானால், அவனால் அதை எதிர்கொள்ள முடியாது என சுவிஸ் தாயார் ஒருவர் கண்ணீருடன் பதிவு செய்துள்ளார்.
COVID-19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஐரோப்பிய நாடுகள் பல கடுமையாக இலக்காகி வருகிறது.
இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா என முக்கிய ஐரோப்பிய நாடுகள் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 389 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 8 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், மொத்தம் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 என அதிகரித்துள்ளது.
சுவிஸில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை இலக்கானவர்கள் எண்ணிக்கை 2,742 என பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், பிறவியிலேயே நோயுடன் பிறந்த தமது 10 வயது மகன் தொடர்பில் உருக்கமான தகவலை பகிர்ந்துள்ளார் சுவிஸ் தாயார் ஒருவர்.
தமது மகன் ஒரே ஒரு வென்ட்ரிக்கிள் உடன் பிறந்ததாக கூறும் அவர், சின்னதாக ஒரு உடல் நலக் கோளாறு ஏற்பட்டாலே அவருக்கு வென்டிலேட்டர் வசதி தேவைப்படும் என்கிறார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு சுவிட்சர்லாந்தில் அதிகரித்துவருவதால், எனது மகன் தொடர்பில் பயப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் அவர்.
குடியிருப்பிலேயே பராமரிப்பில் இருக்கும் அவர், வெளியே எங்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால், எனது கணவரும் நானும் வேலை நிமித்தம் நாள் தோறும் வெளியே சென்ல்ல வேண்டிய சூழல் உள்ளது.
எங்களில் ஒருவருக்கு அந்த நோய் தொற்று இருந்து, அதனுடன் நாங்கள் குடியிருப்புக்கு சென்று, அதனால் எங்கள் மகனும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கிறார் அவர்.
அதனால் தற்போது மகனிடம் இருந்து விலகியே இருக்க முயற்சிப்பதாகவும், கையுறைகள் மற்றும் எப்போதும் கிருமி தொற்றில் இருந்து அடிக்கடி சுத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனக்கு எனது மகனின் நிலை தொடர்பில் நன்கு தெரியும் என குறிப்பிடும் அவர், கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எனது மகன் இலக்காக நேர்ந்தால் கண்டிப்பாக பிழைக்க மாட்டான் என்பது தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.