கொலம்பியாவில் கொரில்லாக்களால் கடத்தப்பட்ட சுவிஸ் நாட்டவர் மீட்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கொலம்பியாவில் கொரில்லாப்படையினரால் கடத்தப்பட்ட சுவிஸ் நாட்டவர் மீட்கப்பட்டுள்ளார்.

மார்ச் மாதத்தின் மத்தியில் Daniel Max Guggenheim மற்றும் Jose Ivan Albuquerque என்னும் சுவிஸ் மற்றும் பிரேசில் நாட்டவர்கள் சுற்றுலா சென்றபோது கொலம்பியாவின் Cauca பகுதியில் கொரில்லாப்படையினரிடம் சிக்கியுள்ளார்கள்.

கொலம்பிய புரட்சிகர ஆயுதப்படையினர் என்று அழைக்கப்படும் இந்த அரசுக்கு எதிரான கொரில்லாப்படையினரில் ஒருவன் துப்பாக்கி முனையில் சுற்றுலாப்பயணிகள் இருவரையும் அவர்களது நாய்களையும் கடத்திச் சென்றுள்ளான்.

சுமார் 11 இடங்களில் மாறி மாறி தங்கவைக்கப்பட்ட அந்த சுற்றுலாப்பயணிகள் இருவரிடமும் பல மில்லியன் பெசோக்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர் கடத்தல்காரர்கள்.

கடும் குளிரில் நிறுத்தப்பட்டு கேலி கிண்டலுக்குள்ளாக்கப்பட்டாலும், தங்களை கடத்தியவர்கள் தங்களை தாக்கவில்லை என்றும், வெகு தூரம் பயணித்து தங்கள் நாய்களுக்கு அவர்கள் உணவு வாங்கித் தந்ததாகவும் தெரிவித்துள்ளனர் அந்த சுற்றுலாப்பயணிகள்.

கொலம்பிய ராணுவத்தின் கடத்தல் எதிர்ப்பு பிரிவினர் அவர்களை மீட்டதோடு, கடத்தல்காரர்களில் ஒருவனையும் கைது செய்துள்ளனர்.

ஒன்றரை மாதங்களாக தங்கள் குடும்பத்தினரை பார்க்கவில்லை என்று கூறும் Danielம் Joseம், எப்படியோ தப்பிப்பிழைத்துவிட்டோம், கொலம்பியாவுக்கு மிக்க நன்றி என்கிறார்கள்.

கடத்தப்பட்டவர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்