முன்னமே கொலை மிரட்டல் விடுத்தவர்: இரு பிள்ளைகளுடன் சடலமாக மீட்கப்பட்ட சுவிஸ் நபர் தொடர்பில் வெளிவரும் தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தந்தையும் இரு பிஞ்சு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், அந்த தந்தை ஏற்கனவே கொலை மிரட்டல் விடுத்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த 38 வயது நபர் தொடர்பில் 2019 செப்டம்பர் மதம் குடும்ப சண்டையில் ஈடுபடுவதாக கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2019 அக்டோபர் இறுதிவரை Schaffhausen மண்டலத்தில் பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் அந்த நபர் ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளார்.

அக்டோபர் 22 ஆம் திகதி முதன் முறையாக அந்த நபரின் மனைவி நகர பொலிசாரை அணுகி, தமது கணவருக்கு தற்கொலை எண்ணம் அதிகமாக உள்ளது எனவும்,

கத்தி ஒன்றை எப்போதும் கைவசம் வைத்துள்ளார் எனவும், பிள்ளைகள் இருவரையும் கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுகிறார் என புகாரில் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்ட Schaffhausen மண்டல பொலிசார், அந்த நபருக்கு உளவியல் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதில் அவர் ஆபத்தற்றவர் எனவும், பிறருக்கு அவரால் ஆபத்தில்லை எனவும் உளவியல் மருத்துவர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

ஆனால் 2020 ஏப்ரல் மாதம் மனைவியின் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், அந்த நபருக்கு நிபந்தனை அபராதம் விதித்தது.

மேலும், 2019 நவம்பர் மற்றும் 2020 ஜனவரி மாதங்களுக்கு இடையே, இருவரும் பிரிந்து வாழவும் பிள்ளைகள் தொடர்பான நிபந்தனைகளையும் வகுத்து Schaffhausen மண்டல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொடர்ந்து 2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுவிஸ் சிறார் மற்றும் வயது வந்தோருக்கான பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறையிட்டு, குழந்தைகள் தந்தையுடன் பாதுகாப்பாக இருக்க வாய்ப்பில்லை எனவும் தம்முடன் அனுப்பி வைக்க அனுமதிக்குமாறும் அந்த தாயார் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்ந்து பிள்ளைகள் இருவரும் தாயாருடனே வாழவும், இரு வாரங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட நேரத்தில் தந்தையுடன் பிள்ளைகளை அனுப்பி வைக்கவும் முடிவானது.

இந்த நிலையிலேயே கடந்த ஞாயிறன்று பிள்ளைகளை அழைத்துச் சென்ற அந்த தந்தை, இரு பிள்ளைகளையும் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் Schaffhausen மண்டல நிர்வாகம் உரிய முறையில் நடந்து கொண்டதாகவும், ஆனால் முழு விசாரணையை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு சம்பவம் நடந்த துர்காவ் மண்டல நிர்வாகத்திடம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்