கொரோனா அபாய நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்து வந்தவர்களில் பலர் செய்த தவறு வெளியானது!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கொரோனா அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் இடம்பெற்ற நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்து வந்தவர்களில் பலர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை 6ஆம் திகதி முதல், அதிக அபாயம் உள்ள நாடுகள் என சுவிட்சர்லாந்து பட்டியலிட்டுள்ள நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வருவோர் தங்களை பத்து நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும்,

தாங்கள் சுவிட்சர்லாந்து வந்த இரண்டு நாட்களுக்குள், தங்கள் வருகை குறித்து சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அப்படி அதிக அபாய நாடுகளிலிருந்து வந்தவர்களில், பாதிக்கும் குறைவானவர்களே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக பிரபல சுவிஸ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

16 மாகாணங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, அதிக அபாயம் உள்ள நாடுகளிலிருந்து சூரிச், ஜெனீவா மற்றும் பேசல் வழியாக சுவிட்சர்லாந்து வந்த 6,000 பேரில், 2,300 பேர் மட்டுமே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், இப்படி அதிக அபாயம் உள்ள நாடுகளிலிருந்து வருவோரால்தான் 10 சதவிகித புதிய கொரோனா தொற்று உருவாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கிட்டுள்ளார்கள்.

எனவே, இனி சுவிட்சர்லாந்துக்கு வரும் பேருந்துகள் மற்றும் விமானங்களில் வருவோருக்கு அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்யப்பட உள்ளதோடு, தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாதவர்களுக்கு 10,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்