சைவமும் தமிழும் போட்டி நிகழ்வு : சுவிஸ் வாழ் தமிழர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
520Shares

முழுமுதற் கடவுள் 'ஞானலிங்கேச்சுரர்" சிவபெருமான் கழகம் கண்டு, படைத்த தமிழும் சைவமும் ஒப்பிட முடியாப் பெரும் பேறுகொண்ட திருநெறியாகும்.

இப்பெரும் நெறியினை ஒழுகி வாழ்வதை நோக்கமாகக் கொண்டு சைவ நெறிக் கூடம் 1994ல் சுவிஸ் நாட்டில் தோற்றம் பெற்றது.

பெருங்கடலில் சேரும் சிறுதுளி வெள்ளமாக, அப்பர் சுவாமிகள் திருநாவுக்கரசர் அருளிய தமிழ்ப்பணித் திருத்தொண்டை, ஞானக்குழந்தை ஞானசம்பந்தரை வணங்கி, ஆரூரன் தொண்டனைத் தொழுது, மாணிக்கவாசகர் திருவடிபணிந்து சைவநெறிக்கூடம் சுவிற்சர்லாந்தை நடுவமாகக்கொண்டு பணிசெய்கிறது.

இதன் அடிப்படையில் வருடம் தோறும் சைவநெறிக் கூடத்தால் முன்னெடுக்கப்படும் எம் செந்தமிழ்ச் செல்வங்களுக்கான "சைவமும் தமிழும் போட்டிநிகழ்வு" 13. 09. 2020 நான்கு மாநிலங்களில் பேர்ன், ஜெனீவா, லசத்போம் மற்றும் லவுசான் எனும் இடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நூற்றுக்காணக்கான பிள்ளைகள் தேவாரம், திருவாசகம், திருப்புராணம், திருப்புகழ், திருக்குறள், திருநிறம்தீட்டல், திருக்கதை ஆகிய போட்டிகளில் விருப்புடனும் உற்சாகத்துடனும் பங்கெடுத்திருந்தனர்.

குழலிலும் இனிய குழந்தைகள் குரலில் இசைத்தமிழ் ஒலித்தது.

எதிர்வரும் காலங்களில் சுவிற்சர்லாந்தில் எத்திசையிலும் 'ஒரு ஊராட்சியில் குறைந்தது 30 பிள்ளைகள் போட்டியில் பங்கேற்ப விண்ணப்பித்தால், அவ்விடத்தில் போட்டிகள் சைவநெறிக்கூடத்தால் தனியாக நடாத்தப்படும் எனவும் சிறப்பு அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

போட்டியில் பங்கெடுக்கும் அனைவருக்கும் மதிப்பளிப்பும், பங்கெடுத்தமைக்கான சான்றிதழும், நினைவுப்பரிசும், வெற்றியீட்டும் போட்டியாளர்களுக்கு வலயரீதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசுக்கேடயமும், வெற்றிச் சான்றிதழும் பேர்ன் மாநிலத்தில் சைவநெறிக்கூடத்தின் நடுவத்தில் (ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மண்டபம்) 07. 11. 2020 சனிக்கிழமை நடைபெறும் 'சைவமும் தமிழும் 2020 விழாவில்" வழங்கப்படும்.

சைவமும் தமிழும்போட்டி ஒருங்கிணைப்பாளர் திரு. குழந்தை விக்னேஸ்வரன் ஐயா இப்போட்டி தொடர்பில் தெரிவிக்கையில் இப்போட்டி நோக்கம் பிள்ளைகளை ஊக்குவிப்பது ஆகும்.

மேலும் குழந்தைகளின் மனதில் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பாங்கினையும், உளத்திறனை வளர்க்கவும் ஊக்கப்படுத்தவும் இது வழிசெய்யும். அன்புமிக்க பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளை இப்போட்டியில் பங்கெடுக்கச்செய்து இளந்தமிழ்ச் செல்வங்களின் தமிழ்த்திறன் வளர்க்க வலுச்சேருங்கள் என்றார்.

மேலும் தெரிவிக்கையில் வெற்றி, தோல்விகளுக்கு அப்பால் எம் தமிழ் மழலைச் செல்வங்களும். இளவயதினரும் தமிழையும், இறையருட் பாடல்களையும் தங்கள் குரலில் மனனம் செய்து பாடுதை ஊக்குவிப்பதே இப்போட்டியின் நோக்கம் என்றார்.

இப்போட்டியில் ஒரு நடுவர் 10 புள்ளி என அடிப்படையில் 3 நடுவர்கள் புள்ளி அளிப்பர். மொத்தம் 30 புள்ளிகளை ஒரு போட்டியாளர் எட்ட முடியும். அப்புள்ளிகளின் அடிப்படையில் 1ம், 2ம், 3ம் இடம் பெறும் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர். ஆகவே ஒரு பிள்ளை இன்னொரு பிள்ளைக்கு போட்டி கிடையாது என்றும் விளக்கினார்.

பண்பாட்டு ஆடைகள் உடுத்தி மழலைகள், சிறார்கள், இளையோர்கள் தமிழ் பாடியது இறையினை தரையிறக்கிய அனுபத்தை அளித்ததாக நடுவர்களில் ஒருவரான திரு. பிரியா மூர்த்தி நெகிழந்தார். அவர் மேற்கொண்டு தெரிவிக்கையில் 2021ல் சுவிற்சர்லாந்து முழுவதும் செறிந்து சைவமும்த தமிழும் போட்டி நடைபெற ஒழுங்கு செய்யப்படும் என்றார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்