சுவிஸில் பொலிஸ் காவலில் மரணமடைந்த 20 வயது இளைஞர்: நீதி கேட்டு போராடும் குடும்பத்தினர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் பொலிஸ் காவலில் மரணமடைந்த 20 வயது இளைஞர் வழக்கு தொடர்பில் முக்கிய சட்டத்தரணி ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெர்ன் மண்டலத்தில் கடந்த 2018 கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் 20 வயதான கிலியன் என்ற இளைஞர் பொலிஸ் காவலில் மரணமடைந்தார்.

போதை மருந்து பயன்படுத்தப்பட்ட நிலையில் கைதான கிலியன், மருத்துவரின் ஒப்புதலுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் கிலியன் உட்கொண்ட போதை மருந்தின் பக்கவிளைவுகளால் சிறையிலேயே உடல் நலம் மோசமடைந்து இறக்க நேரிட்டது.

இந்த விவகாரம் தொடர்பில், சம்பவம் நடந்த இரவு என்ன நடந்தது என்பதை தெரிவிக்க வேண்டும் என கூறி, கிலியனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுநாள் வரை போராடி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 2019 பெப்ரவரி மாதம் பெர்ன் மண்டலத்தின் உயர் நீதிமன்றம் தொடர்புடைய மருத்துவர் மீது பிழை இல்லை என விடுவித்தது.

இந்த வழக்கு தொடர்பில் இதுவரையான நடவடிக்கைகள் அனைத்திலும் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றே கிலியனின் பெற்றோர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது இந்த வழக்கு தொடர்பில், கிலியனின் பெற்றோருக்கு ஆதரவாக பிரபல மனித உரிமை சட்டத்தரணி பிலிப் ஸ்டோல்கின் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டோல்கின் வெளியிட்டுள்ள கருத்தின் அடிப்படையில், கிலியனின் வழக்கை தவறான கோணத்தில் விசாரித்து முடிவு வந்துள்ளதாகவும், விசாரணையில் உட்படுத்த வேண்டிய முக்கிய நபர்களை விட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசுக்கு எதிராக இதுபோன்ற நான்கு வழக்குகளில் வென்றுள்ள ஸ்டோல்கின், கிலியன் வழக்கில் தேவை ஏற்படும் எனில் ஐரோப்பிய நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்