சுவிற்சர்லாந்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தளர்த்த வேண்டும்! மேலெழும் புதிய கோரிக்கைகள்

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
சுவிற்சர்லாந்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தளர்த்த வேண்டும்! மேலெழும் புதிய கோரிக்கைகள்

கொரோனா தொற்று பரவல் நெருக்கடி காரணமாக வரையறுக்கப்பட்ட 59 நாடுகளிலிருந்து சுவிற்சர்லாந்திற்கு வரும் நபர்கள் தங்களை பத்து நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற நடைமுறை சட்டமானது மிகவும் அபத்தமானது என அந்நாட்டின் மாநிலங்களின் கவுன்சில் உறுப்பினர் ஆண்ட்ரியா கிளாடியோ கரோனி தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதுள்ள தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என பெடரல் கவுன்சில் எதிர்பார்க்கிறது என்றும், "தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் சுவிற்சர்லாந்தை விட கணிசமாக அதிகமான தொற்றுநோய்களைக் கொண்ட ஒரு நாட்டில் இருக்கும்போது ஏற்படும் அசௌகரியத்தை இங்கே உணர்கிறார்.

இருப்பினும், தற்போது, சுவிற்சர்லாந்தைப் போன்ற குறைவான அல்லது அதே எண்ணிக்கையிலான நோய் தொற்றுகள் உள்ள நாடுகளில் இருந்து நுழையும் நபர்களும் தனிமைப்படுத்துதலில் இருக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.” இது அவசியமற்றது என கரோனி கூறியுள்ளார். தொடர்ந்து,

“வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட நபர் எந்த நாட்டிலிருந்து வந்திருக்கிறாரோ அந்த நாட்டின் கொரோனா தொற்று எண்ணிக்கையானது சுவிற்சர்லாந்தை விட அதிகமாக இருக்க வேண்டும். ” என்றும்,

“சுவிற்சர்லாந்தில் தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகள் பொருளாதாரத்தையும் சுற்றுலாவையும் சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் சுதந்திரத்தை கிட்டத்தட்ட தன்னிச்சையாக கட்டுப்படுத்துகின்றன.” என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது ஜமைக்கா மற்றும் ஈரானிலிருந்து சுவிற்சர்லாந்திற்கு வரும் நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த நாடுகளில் கொரோனா எண்ணிக்கை சுவிற்சர்லாந்தை விட குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனியின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த பசுமை தேசிய கவுன்சிலர் கதரினா பிரிலிக்ஸ்-ஹூபர், “தற்போதைய நடவடிக்கைகள் நமது நாட்டினை இரண்டாவது பூட்டுதலிலிருந்து காப்பாற்றும்.

எனவே விதிமுறைகளை தளர்த்துவதில் கவனமாக செயல்பட்டு வருகின்றோம். நமது நாட்டை விட குறைவான கொரோனா தொற்று எண்ணிக்கையை கொண்டுள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்துதல் அவசியமா என்கிற கேள்வி பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

ஆனால், அதற்கு கொரோனா பரிசோதனைகள் நடைமுறையானது தீவிரமாக்கப்பட வேண்டும். விரைவாக்கப்பட வேண்டும்.” என ஹூபர் கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments