அறிகுறி இருந்தது... மருத்துவ உதவியை நாடவில்லை: சுவிஸில் கொரோனா தொடர்பில் வெளிவரும் புதிய தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கொரோனா பாதிப்பு இருந்தும் பரிசோதனைக்கு உட்படவோ, மருத்துவ உதவியை நாடவோ முயலாதவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருந்தும் சிகிச்சை அல்லது பரிசோதனையை மேற்கொள்ள தயங்கியதன் காரணத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால், கொரோனா பாதிப்பு இருந்தும் மருத்துவ அமைப்புகளிடம் தெரியப்படுத்தாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக நிபுணர்களால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது.

சுவிட்சர்லாந்தில் சுமார் 7200 பேர் கொரோனா அறிகுறிகள் இருந்தும் பரிசோதனைக்கு உட்படவோ, மருத்துவ உதவியை நாடவோ முயலவில்லை என புதிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

சூரிச் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் தமக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும், மருத்துவ உதவியை நாடவும் மறுத்துள்ளார்.

தாம் விளையாடும் கால்பந்து குழுவில் மூவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தமக்கும் லேசான அறிகுறிகள் தென்பட்டதாக அந்த இளைஞர் தெரிவித்துள்ளார்.

ஆனால், கொரோனாவுக்கான பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்ள கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார்.

பரிசோதனையில் தமக்கு கொரோனா இருப்பது உறுதியானால், தாம் பணியாற்றும் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

இதனால் 10 நாட்களுக்கு நிறுவனம் மொத்தமாக மூடப்படும் சூழல் ஏற்படும். அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு தற்போதைய சூழலில் மிக அதிகம் என்றார் அந்த இளைஞர்.

இதனையடுத்து அடுத்த 10 நாட்களுக்கு அவர் தமது குடியிருப்பில் இருந்தே பணியாற்றியுள்ளார். குடும்பத்தாருடனும் நண்பர்களிடமும் நிலைமையை விளக்கிய அவர், அந்த 10 நாட்களும் சற்றே விலகி இருக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

மட்டுமின்றி, எந்த நபர்களையும் இந்த 10 நாட்களில் அவர் சந்திக்கவில்லை என்றே தெரிவித்துள்ளார்.

10 நாட்களுக்கு பின்னரும் தம்மை சுற்றியுள்ள எவருக்கும் கொரோனா அறிகுறிகள் தென்படவில்லை எனவும், அடுத்த சில நாட்களில் தாம் முழு ஆரோக்கியத்துடன் திரும்பியதாகவும் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்