சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில், சில மாகாணங்கள் மட்டும் சாமர்த்தியமாக கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.
அவை எந்த மாகாணங்கள்? அவற்றால் மட்டும் எப்படி கொரோனாவைக் கட்டுப்படுத்த முடிந்தது?
Schwyz மாகாணம்
வெறும் 159,000 மக்கள்தொகையைக் கொண்ட Schwyz மாகாணத்தில், கடந்த சில வாரங்களாக கொரோனா வேகமாக அதிகரித்துவந்தது.
சில திருவிழாக்களில் மக்கள் கலந்துகொண்டதுதான் இந்த கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என தெரியவந்தது.
ஆனால், அக்டோபர் மாதம் 30ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்ட கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, Schwyz மாகாணத்தில் கொரோனா பரவல் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
திருவிழாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன, நாட்டின் மற்ற பகுதிகளில் நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், Schwyz மாகாணத்தில் அதைவிட ஒரு படி மேலே போய், வெறும் 30 பேர் வரை மட்டுமே கூட அனுமதிக்கப்பட்டுள்ளது. பணித்தலங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சென்ற வாரம் 223 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருந்த Schwyz மாகாணத்தில், இந்த வாரம் வெறும் 21 பேருக்குத்தான் கொரோனா பரவியுள்ளது.
Valais மாகாணம்
அக்டோபர் மற்றும் நவம்பர் மாத துவக்கத்தில், 344,000 மக்கள்தொகையைக் கொண்ட Valais மாகாணத்தில்தான் சுவிட்சர்லாந்திலேயே அதிக கொரோனா பரவல் காணப்பட்டது.
அக்டோபர் 27 நிலவரப்படி, Valais மாகாணத்தில் 880 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது, ஆனால், நவம்பர் 8ஆம் திகதி, அது 170ஆக குறைந்துள்ளது.
அதற்கு காரணம், சுவிட்சர்லாந்து கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்யும் முன்னரே, Valais மாகாண அதிகாரிகள் நடவடிக்கைகளை துவக்கிவிட்டனர்.
மூன்று வாரங்களுக்கு முன்பே, ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே கூடும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. உணவகங்கள், மதுபான விடுதிகள், தியேட்டர்கள் முதலான பொழுதுபோக்கு அமைப்புகள் முதலானவை மூடப்பட்டன.
மற்ற மாகாணங்களிலுள்ள மக்கள், அனைத்து புனிதர்கள் தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும்போதும், Valais மாகாணத்தில் அதற்கு கூட அனுமதியளிக்கப்படவில்லை.
உதாரணத்திற்காக கூறினால், அனைத்து புனிதர்கள் தினத்தைக் கொண்டாடிய Fribourg மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், Valais மாகாணத்திலோ, கொரோனா பெருமளவு குறைந்துள்ளது.