பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள், 2021 ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் அறிவிப்பால், பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் தங்கள் விடுமுறையை ரத்து செய்யவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. (பிரெக்சிட்டின் மற்றொரு தாக்கம்!)
பிரெக்சிட்டுக்குப் பின், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக கருதப்படாத பிரித்தானியா, அதிக அபாயம் உள்ள ஒரு நாடாகவே கருதப்படும் என்பதால், பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இனி சுவிட்சர்லாந்துக்கு அத்தியாவசியமற்ற பயணம் மேற்கொள்ள முடியாது.
கொரோனா காலகட்டத்திலும், இதுவரை சுவிட்சர்லாந்து பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு தன் நாட்டை திறந்துதான் விட்டிருந்தது, அப்போது ஐரோப்பிய ஒன்றிய Schengen தடையில்லா போக்குவரத்து விதி பயன்பாட்டில் இருந்ததுதான் அதன் காரணம்.
ஆனால், பிரெக்சிட்டுக்குப்பின் ஐரோப்பிய ஒன்றிய Schengen தடையில்லா போக்குவரத்து விதி பிரித்தானியாவுக்கு பொருந்தாது என்பதால், பிரித்தானியாவின் கொரோனா நிலைமையை காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பிரித்தானிய பயணிகளை தடை செய்ய முடியும்.
நேற்றிரவு சுவிஸ் அரசு தன் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீங்கள் ஒரு பிரித்தானியராக இருந்தால், 2021 ஜனவரி 1ஆம் திகதி முதல் நீங்கள் அத்தியாவசியமற்ற காரணங்களுக்காக (உதாரணமாக, சுற்றுலாவுக்காக) சுவிட்சர்லாந்துக்குள் நுழையக்கூடாது.
சுவிட்சர்லாந்தால் பிரித்தானியா அதிக அபாய நாடாக கருதப்படும் வரையில் இந்த கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, நார்வேயும், பிரித்தானியாவில் பரவும் கொரோனாவை காரணம் காட்டி, புத்தாண்டில் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.