புதிய கொரோனா வைரஸால் பிரித்தானியர்களுக்கு தடை... சுவிட்சர்லாந்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
160Shares

பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதுவகை அதி தீவிர கொரோனா வைரஸ், பிரித்தானியர்களுக்கு மட்டுமின்றி வேறு சில நாட்டவர்களுக்கும் முற்றிலும் எதிர்பாராத கோணத்திலெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவில் வேகமாக பரவிவரும் புதுவகை அதி தீவிர கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு தடைவிதித்துள்ள பல்வேறு நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று.

ஆனால், அந்த தடை சுவிட்சர்லாந்தின் வருவாய் மீதே எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப்பிறகு சுவிஸ் பனிச்சறுக்கு ரிசார்ட்டுகளில் வந்து குவிவது பிரித்தானியர்களுக்கு மிகவும் பிடித்த விடயங்களில் ஒன்று.

ஆனால், இந்த புதிய கொரோனா பரவல் காரணமாக, பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் சுவிட்சர்லாந்து வர திங்கட்கிழமை முதல் அந்நாடு தடை விதித்துள்ளது. அத்துடன், டிசம்பர் 14 முதல் ஏற்கனவே சுவிட்சர்லாந்துக்கு வந்துவிட்ட பிரித்தானியர்களும் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஆகவே, பனிச்சறுக்கு ரிசார்ட்டுகள் கடுமையாக பாதிக்கப்படும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.

பெரும் செலவு செய்து சுவிட்சர்லாந்துக்கு வந்துவிட்டு, அங்கு பனிச்சறுக்கு ரிசார்ட்டுக்கு செல்வதற்கு பதில், 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள யார்தான் விரும்புவார்கள்.

அதனால், சில பிரித்தானியர்கள் பேசாமல் பிரித்தானியாவுக்கே திரும்பிவிட திட்டமிட்டுள்ளார்கள்.

ஆக மொத்தத்தில், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக சுவிட்சர்லாந்து பிரித்தானியர்கள் மீது விதித்துள்ள தடையும், தனிமைப்படுத்தல் விதிகளும் சுவிட்சர்லாந்தின் வருவாய்க்கே பாதகமாக அமைந்துள்ளதோடு, தங்களுக்கு பிரியமானவர்களுடன் பண்டிகைக் காலத்தை செலவிட திட்டம் வைத்திருந்தவர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்