உலகமே அன்னாந்து பார்க்கும் சுவிட்சர்லாந்தில் வறுமை அதிகரிப்பாம்: புள்ளிவிவரம் சொல்கிறது

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares

உலகமே பணக்கார நாடு என அன்னாந்து பார்க்கும் சுவிட்சர்லாந்தில், 2019ஆம் ஆண்டில், வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று வெளியான புள்ளிவிவரம் ஒன்றில், 2019இல் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வோரின் எண்ணிக்கை 8.7 சதவிகிதமாக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் பெடரல் புள்ளிவிவரங்கள் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 8.5 மில்லியன் மக்கள் வாழும் சுவிட்சர்லாந்தில் கொரோனா தாக்குவதற்கு முந்தைய ஆண்டில் 735,000 பேர் வறுமையால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 735,000 பேரில், 155,000 பேர் வேலை பார்ப்பவர்களாக இருந்த நிலையிலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அவர்களும் வறுமையில் இருந்தது தெரியவந்துள்ளது. வேலை பார்ப்பவர்களில் வறுமையிலிருந்தோர் வீதம் 4.2 சதவிகிதமாக இருந்துள்ளது.

குடிமக்களில் எட்டில் ஒருவர் (12 சதவிகிதத்தினர்) அன்றாட வாழ்வின் தேவைகளை சந்திப்பதற்கே தடுமாறியுள்ளார். ஐந்தில் ஒருவர் (21 சதவிகிதம் பேர்) மாதம் 2,500 சுவிஸ் ப்ராங்குகள் கூட செலவுக்கு இல்லாமல் தடுமாறியிருக்கிறார்கள்.

இதில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் என்னவென்றால், வறுமையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள், தந்தை அல்லது தாய் என ஒரு பெற்றோர் மட்டுமே உள்ள குடும்பங்கள், குறைந்தபட்ச அடிப்படைக் கல்வி மட்டுமே கற்றவர்கள் மற்றும் வேலையில்லாதவர்கள்தான்.

இந்த விடயம் கொள்ளைநோய்க்கு முந்தைய காலகட்டத்தில் நிகழ்ந்தது என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

கொரோனாவுக்குப்பின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை வறுமைக்கோடு என்பது தனி நபருக்கு 2,279 சுவிஸ் ப்ராங்குகள் வருமானம், இரண்டு பெரியவர்கள், இரண்டு பிள்ளைகள் கொண்ட வீட்டைப் பொருத்தவரை மாதம் ஒன்றிற்கு 3,976 சுவிஸ் ப்ராங்குகள் வருமானம் ஆகும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்