கொரோனா காலகட்டத்தில் மாஸ்க் விற்றே கோடீஸ்வரர்களான சுவிஸ் இளைஞர்கள்: எதிர்பாராமல் ஏற்பட்டுள்ள சிக்கல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
0Shares

சுவிட்சர்லாந்தில் இரண்டு இளைஞர்கள் கொரோனா காலகட்டத்தில் மாஸ்க் விற்றே பெரும் கோடீஸ்வரர்களாகியிருக்கிறார்கள்.

வெறும் 23 வயதேயான Jascha Rudolphi மற்றும் Luca Steffen என்னும் இரண்டு இளைஞர்கள், கொரோனாவின் முதல் அலையின்போது மாஸ்க் விற்பனை செய்துள்ளார்கள்.

மாஸ்க் விற்றதன் மூலம் மட்டுமே அவர்கள் இருவரும் தனித்தனியாக 30 முதல் 100 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் சம்பாதித்துள்ளார்கள்.

அவர்கள் இருவரும், வெளிநாடுகளிலிருந்து மாஸ்குகளை இறக்குமதி செய்து, தங்கள் நிறுவனம் மூலம் கூடுதல் விலைக்கு (8.50 முதல் 9.90 சுவிஸ் ப்ராங்குகள் வரை) விற்றுள்ளார்கள்.

இப்போது சுவிஸ் தயாரிப்பான மாஸ்குகளின் விலை வெறும் ஒரு சுவிஸ் ப்ராங்குக்கும் குறைவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், பெரும் விலைக்கு தரமற்ற, சில நேரங்களில் போலி மாஸ்குகளை அரசாங்கத்துக்கு விற்றதாக இருவர் மீதும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு, எகிப்து மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றிலிருந்து இருவரும் 700,000 மாஸ்குகளை இறக்குமதி செய்து சுவிஸ் இராணுவத்திற்கு விற்பனை செய்துள்ளார்கள்.

பிறகு விசாரித்ததில், அந்த நிறுவனம் மாஸ்குகளை உற்பத்தி செய்வதேயில்லை, அதாவது அவை போலி மாஸ்குகள் என்பது தெரியவந்தது. ஆகவே, அரசு அதிகாரிகள் அவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்துள்ளார்கள்.

ஆனால், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள Jascha மற்றும் Luca இருவரும், ஜேர்மன் சுகாதார அமைச்சகம் தங்கள் மாஸ்குகளை பாராட்டி எழுதியுள்ள கடிதம் ஒன்றை தங்கள் தரப்பு வாதத்திற்கு ஆதாரமாக முன்வைத்துள்ளார்கள்.

Jascha மற்றும் Luca இருவருக்கும் இப்படி திடீரென சிக்கல் ஏற்பட காரணம் என்னவென்றால், இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம், 2.5 மில்லியன் மதிப்புள்ள தனித்துவம் வாய்ந்த ஃபெராரி கார்களையும் வேறு பல கார்களையும் வாங்கியுள்ளார்கள்.

அதனால் அவர்கள் ஊடகங்களின் கவனம் ஈர்க்க, இப்போது மாட்டிக்கொண்டு விழிக்கிறார்கள்.

ஆனால், முறைப்படி வியாபாரம் செய்து வரி எல்லாம் ஒழுங்காக செலுத்தியதாகக் கூறும் இருவரும், தாங்கள் செய்த ஒரே தவறு, கொரோனா காலகட்டத்தில் விலையுயர்ந்த கார்களை வாங்கியது மட்டுமே என்கிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்