கருவிலிருக்கும் குழந்தைகளின் நன்மைக்காக! பிரித்தானியாவில் வலுவடையும் கோரிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிறப்புக் குறைபாடுகளிலிருந்து குழந்தைகளைக் காப்பதற்காக பிரித்தானியாவில் தினசரி உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மாவில் ஃபோலிக் அமிலத்தை சேர்க்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

ஃபோலிக் அமிலம் என்று அழைக்கப்படும் வைட்டமின் Bயை அதிகம் எடுத்துக்கொள்வதால் கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் பிரச்சினையான spina bifidaவைத் தவிர்க்கலாம் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

உலகம் முழுவதிலும் 80 நாடுகளில் தினசரி உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மாவில் ஃபோலிக் அமிலம் சேர்க்கப்படுகிறது. ஆனால் தற்போது பிரித்தானியாவில் இந்த வழக்கம் நடைமுறையில் இல்லை.

கர்ப்பிணிப் பெண்கள் ஃபோலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள், ஆனால் பலர் எடுத்துக்கொள்வதில்லை.

இதனால் தினசரி உணவு தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மாவிலேயே ஃபோலிக் அமிலத்தைச் சேர்த்துவிட்டால் நல்ல பலனை எதிபார்க்கலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.

Wales, Scotland மற்றும் Northern Irelandஇன் சுகாதாரத்துறை அமைச்சர்கள் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் பிரித்தானியாவில் மட்டும் ஆதரவு கிடைக்கவில்லை.

ஃபோலிக் அமிலத்தை குறைவாக எடுத்துக்கொள்வதால் பலனில்லை என்று சில ஆய்வுகளும் அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஆபத்தில்லை என்று சில ஆய்வுகளும் தெரிவித்தாலும், தினசரி உணவில் ஃபோலிக் அமிலத்தை சேர்ப்பது பாதுகாப்பானது என்பதற்கும் போதுமான ஆதாரங்களில்லை.

ஆனால் தினசரி உணவில் ஃபோலிக் அமிலத்தை சேர்த்துக்கொள்வதால் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் குறைபாடுகள் தவிர்க்கப்படும் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளதாக King's College Londonஇல் Nutrition expertஆக உள்ள பேராசிரியர் Tom Sanders கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் ஆயிரத்தில் ஒரு குழந்தை மூளை, முதுகெலும்பு அல்லது தண்டுவடப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறது.

தினசரி உணவில் ஃபோலிக் அமிலத்தை சேர்ப்பதற்கு ஆகும் செலவு மிக சொற்பமே என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

அரசின் 1998 ரொட்டி மற்றும் மாவு நெறிமுறைகளின்படி மாவில் ஏற்கனவே இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் சில வைட்டமின்கள் சேர்க்கப்படுகின்றன.

குழந்தைகளுக்கு மூளையில் ஏற்படும் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக ஃபோலிக் அமிலத்தை சேர்க்காமல் இருப்பது கையில் போலியோ தடுப்பு மருந்தை வைத்துக்கொண்டு அதைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கு சமம் என்று Wolfson Institute of Preventative Medicineஐ சேர்ந்த பேராசிரியர் Sir Nicholas Wald தெரிவித்துள்ளார்.

ஃபோலிக் அமிலம் அடர் பச்சைக் காய்கறிகளில் இயற்கையாகவே உள்ளது ஆனால் பிரித்தானியப் பெண்களில் முக்கால்வாசிப்பேர் அவற்றைப் போதுமான அளவில் உண்பதில்லை.

குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்கள் கருவுறுவதற்கு முன்பிருந்து கர்ப்பகாலத்தின் 12ஆவது வாரம் வரைக்கும் தினமும் 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று NHS நெறிமுறைகள் தெரிவிக்கின்றன. நமது பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டுமென்று விரும்புகிறோம்.

ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ள உணவுகளை அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் என்று சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

பசலைக் கீரை, முளைகட்டிய தானியங்கள், முட்டைகோஸ், ப்ரக்கோலி, பீன்ஸ், ஆரஞ்சு ஜூஸ், கோழிக்கறி, இறால், ஈரல் மற்றும் சில சிரியல்கள் ஆகியவற்றில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers