வீல் சேரில் இருந்தபடியே விஞ்ஞானத்தை ஆண்ட ஸ்டீபன்: வியப்பூட்டும் தகவல்கள்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இன்று தன்னுடைய 76-வயதில் மரணமடைந்தார்.

இவரது மரணம் விஞ்ஞானிகள் உட்பட பலருக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாக்கிங் தன்னுடைய இளம் வயதிலேயே Amyotrophic Lateral Sclerosis என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டதால், அவரது கை, கால் முதலிய ஊடலியக்கங்கள் பாதிக்கப்பட்டு பேச்சும் தன்மையை இழந்தார்.

இப்படி கை, கால் முடக்கத்தால் பாதிக்கப்பட்ட போதும் இயற்பியல் ஆராய்ச்சி, எழுத்து துறை போன்றவைகளில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

இது எல்லாம் இவரால் எப்படி முடிந்தது, எப்படி பேசினார், என்பதைப் பற்றிய முழுவிவரங்களை காண்போம்.

ஹாக்கிங்கால் பேசவோ, எழுதவோ முடியாது என்றாலும் அவருக்கு தொழில் நுட்பம் பெரிதும் உதவியது என்றால் மிகையாகாது.

அவரது கை, கால் முடக்கத்தை அதி நவீனத் திறன் கொண்ட சக்கர நாற்காலி ஓரளவுக்கு ஈடு செய்தது, அதே போன்று அவரது குரலை மீட்டெடுப்பதற்கு Speeech Synthesizer என்ற செயலி உதவியது.

அவரால் முகத்தின் தசைகள் பகுதியை மட்டுமே அசைக்க முடியும் என்பதால் இந்த அசைவுகளைக் கொண்டே, அவருக்கு ஒரு குரலைக் கொடுத்திருந்தது ஒரு புதிய தொழில்நுட்பம்.

ஹாக்கிங் உட்கார்ந்திருந்த சக்கர நாற்காலி கடந்த 1997-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது இண்டெல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அந்த நாற்காலியில் டேப்லெட் கணினி போன்றவைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

பேச்சை இழந்த ஹாக்கிங்கிற்கு பேச்சை கொடுத்தது EZ Keys என்ற மென்பொருள், இதை word Plus என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. அது டேப்லேட் கணினியில் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த மென்பொருளை ஸ்டீபன் ஹாக்கிங் தனது கன்னத்தை அசைப்பதன் மூலம் கட்டுப்படுத்தினார். இந்த அசைவானது அவர் அணிந்திருக்கும் கண்ணாடியில் உள்ள அகச்சிவப்பு கருவி மூலம் உணரப்பட்டது.

அதாவது ஹாக்கிங் தான் சொல்ல நினைப்பதை, டேப்லட் கணினியில் கொண்டுவருவதற்கு தன் கன்னத்தை அசைப்பார். அப்படி அசைக்கப்படும் போது டேப்லெட் கணினியின் கீபோர்டில் உள்ள எழுத்துகள் தெரிவு செய்யப்படும்.

அதில் முதல் சில எழுத்துகளை டைப் செய்தவுடனேயே கணிப்பு முறையில் மற்ற எழுத்துகள் நிரப்பப்பட்டு ஒரு சொல் திரையில் தோன்றும்.

அந்த எழுத்துகளில் தொடங்கும் பிற சொற்களும் அதன் கீழே பட்டியலிடப்படும். தேவைப்பட்டால் அந்த சொற்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

அதன் பின் அந்த வாக்கியம் தயாராகிவிட்டால் அது நேரடியாக TEXT TO SPEECH முறை மூலமாக குரலாக மாற்றப்படுகிறது. இதில், சில குறியீடுகளுக்காக உதடு மற்றும் புருவத்தையும் ஹாக்கிங் பயன்படுத்தினார்

மேலும் EZ Keys மென்பொருள் மூலமாக விண்டோஸ் கணினியின் சுட்டியைக் கூட இயக்க முடியும். இதனால் தாமாகவே மின்னஞ்சலைப் பார்ப்பதும் ஹாக்கிங்கிற்குச் சாத்தியமாக இருந்தது.

ஸ்கைப் போன்ற இணையத் தொடர்பு வசதிகள் மூலமாக உலகெங்கிலும் உள்ள நண்பர்களிடம் பேசவும் அவரால் முடிந்தது.

கல்லூரிகள், பொதுமேடைகளில் ஹாக்கிங் பேசுவதற்கு இந்த முறையைத் தான் பயன்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி பொது மேடைகளில் மற்றும் கல்லூரிகளில் பேசுவதற்கு முன் அது தொடர்பான முழு உரையையும் ஹாக்கிங் முன்னரே தயார் செய்து வைத்து விடுவார்.

இதைத் தொடர்ந்து அங்கு தேவை தேவைப்படும் போது ஒவ்வொரு வாக்கியமாகக் குரல் மாற்றும் மென்பொருளுக்கு அனுப்புவதன் மூலம் அவரால் சாதாரணமாகப் பேசுவது போல உரையாற்ற முடிந்தது.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகம் எப்படி மேம்பட்டுக் கொண்டே வந்ததோ, அதே போன்று ஹாக்கிங் உலகுடன் தொடர்பு கொள்ளும் முறையும் மேம்பட்டு வந்தது. இண்டெல் நிறுவனமும் தன்னுடைய தொழில் நுட்பத்தை அவ்வப்போது மாற்றியே வந்தது.

அதன் பயனாக சமீபகாலங்களில் ஹாக்கிங்கால் முன்பை விட வேகமாக பேச முடிந்தது.

ஹாக்கிங், வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும், வெற்றிபெறுவதற்கு ஏதேனும் ஒரு வழி இருந்தே தீரும் என்று அவ்வப்போது கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்