சுற்றுலா சென்ற இடத்தில் கதாநாயகர்களாக மாறிய பிரித்தானிய தம்பதி: குவியும் பாராட்டுக்கள்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

கிரீஸ் நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட பிரித்தானிய தம்பதி சாலையில் கிடந்த €7,000 பணத்தை பத்திரமாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகின்றனர்.

பிரித்தானியாவை சேர்ந்த ஜெசிகா பிராங்க் (22) - எட்வார்ட் கிப்சன் (24) தம்பதியினர் தங்களுடைய விடுமுறையை கழிப்பதற்காக கிரீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அங்கு சாலையில் நடந்துகொண்டிருக்கும் போது, சிறிய அளவிலான பை ஒன்று இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்த அவர்கள் உடனே அதனை எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஜெசிகா கூறுகையில், ஆரம்பத்தில் அழகு சாதன பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பை என நினைத்துக்கொண்டு தான், நான் எடுத்து திறந்து பார்த்தேன். ஆனால் திறந்ததும் விவரிக்க முடியாத அதிர்ச்சியில் உறைந்து போனேன். ஏராளமான பணக்கட்டுகள் இருந்தன.

உடனே அதனை எடுத்துக்கொண்டு உள்ளூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தோம். உள்ளிருந்த பணத்தை எங்களின் கண்முன்னே பொலிஸார் எண்ணி €7,000 இருப்பதாக கூறினார்.

பின்னர் நாங்கள் எங்களுடைய ஹோட்டல் அறைக்கு வந்துவிட்டோம். சிறிது நேரம் கழித்து பொலிஸ் நிலையத்திலிருந்து மீண்டும் அழைப்பு வந்தது. உங்களை பார்க்க வேண்டும் என ஒருவர் காத்திருக்கிறார் என கூறினார்கள். உள்ளே நாங்கள் சென்றதும், ஒரு பெண் ஒருவர் வேகமாக ஓடிவந்து என்னை கட்டியணைத்து கண்ணீர் விட்டார். நீங்கள் இருவரும் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என எங்களை வாழ்த்தினர்.

பின்னர் அவருடைய கடைக்கு வந்து ஒரு பரிசுப்பொருளை வாங்கி செல்லுமாறு எங்களிடம் கூறினார். உங்களிடம் எந்த ஒரு உதவியும் எதிர்பார்த்து நாங்கள் இதை செய்யவில்லை என நான் மறுத்துவிட்டேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers