சுற்றுப்பயணத்தின் முடிவில் வெளியான சாக்லேட் பாய் இளவரசர் ஹரியின் இன்னொரு முகம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒரு வேடிக்கையான மனிதராக, எப்போதும் தனது மனைவியின் கைகளைப் பற்றிக் கொண்டே நடக்கும் ஒரு காதல் கணவனாக, அவர் மென்மையானவர், அதனால் அவருக்கு மேகன் போன்ற ஒரு உறுதியான மனைவி வேண்டும் என்றெல்லாம் பத்திரிகைகள் கூறும் அளவிற்கு உலகிற்கு காட்டப்பட்ட இளவரசர் ஹரி, சிட்னியில் ஆற்றிய உரை ஒன்றில் தனது இன்னொரு முகத்தைக் காட்டியுள்ளார்.

பல நாடுகளுக்கு தனது மனைவியுடன் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசர் ஹரி கடைசியாக சிட்னியில் 2018ஆம் ஆண்டிற்கான Invictus விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் முன் உரையாற்றினார்.

இவ்வளவு நாள் நாம் பார்த்த ஹரியா இது என வியக்குமளவிற்கு இருந்தது அவரது உரை. மிகவும் உறுதியான குரலில் கணீரென அவர் ஆற்றிய உரை, ஒருபக்கம் மக்களின் கரகோஷத்தையும், மறுபக்கம் கண்ணீரையும் வரவழைத்தது.

இளவரசர் ஹரியின் இன்னொரு முகத்தை அங்கு காண முடிந்தது. Invictus விளையாட்டுகளின் ரகசியம், போட்டியில் பங்கு கொண்ட பலரை நடக்கவும், நீந்தவும், மீண்டும் அசையவும் தக்கதாக செய்த மருத்துவ உலகின் அதிசயத்தில் இல்லை.

அது, மனோதிடமே மீண்டு வருவதற்கு முக்கியமானது என்பதை ஏற்றுக் கொள்வதில்தான் உள்ளது.

நமது போட்டியாளர்கள் ஒரு சோகக் கதையை, உத்வேகம் அளிக்கும் ஒரு கதையாக மாற்றியுள்ளார்கள் என்று அவர் கூறியதும் அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

வெறுமனே உயிருடன் இருப்பதற்கு பதில் அவர்கள் வாழ விரும்பியுள்ளார்கள். நீங்கள் எதிர்கொள்ளும் சவால் உண்மையானது என நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போதே உங்களுக்கு நம்பிக்கை வந்துவிடும்.

உங்கள் குறையை நீங்கள் உணர்ந்து கொள்ளும்போதே நீங்கள் வலிமையானவர்களாக ஆக முடியும்.

உதவி வேண்டுமென நீங்கள் தைரியமாக கேட்கும்போதே, நீங்கள் உயர்த்தப்படுவீர்கள். உங்கள் கதையை நீங்கள் பகிரும்போது நீங்கள் உலகையே மாற்றலாம். உங்களுக்கு சேவை செய்வதற்கு இதைவிட வேறொரு சிறந்த முறையை என்னால் நினைத்துக்கூட பார்க்க இயலாது.

உங்களை என்னுடைய நண்பர்கள்,என்னுடைய Invictus குடும்பம் என்று அழைப்பதில் நான் மிகுந்த பெருமை அடைகிறேன்.

எதுவும் சாத்தியமே என்று நீங்கள் உலகத்திற்கு காட்டுகிறீர்கள், என்று அவர் கூறும்போது ஒவ்வொருவர் கண்களிலும் கண்ணீர். சக்கர நாற்காலியில் வந்த, ஒரு கால் மட்டுமே உடைய ஒரு வீரர், எழுந்து நின்று ஹரி ஹரி என கோஷமிடுகிறார்.

அரங்கம் அவருடன் இணைந்து கொள்கிறது. உங்களுக்கு மிக்க நன்றி, மீண்டும் 2020ஆம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் சந்திப்போம் என்று கூறி விடை பெறுகிறார் ஹரி. அரங்கம் மீண்டும் அதிர்கிறது.

Invictus விளையாட்டுப் போட்டிகள், இளவரசர் ஹரியால் உருவாக்கப்பட்ட, காயமடைந்த, உறுப்புகளை இழந்த, நோயுற்ற ராணுவ வீரர்களுக்காக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்