பாகிஸ்தான் பெண்ணுக்கு உதவ பிரித்தானியர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இறை தூஷணம் கூறியதாக பாகிஸ்தானில் சிறையிலடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணுக்கு உதவ பல நாட்டினரும் முன்வந்துள்ள நிலையில் பிரித்தானியர்களும் அவருக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு பிரித்தானிய நாளாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, பாகிஸ்தான் கிறிஸ்தவ பெண்ணாகிய ஆசியா பீபிக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருவோர் வெளியுறவுச் செயலரான Jeremy Huntக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

ஆசியா விடுவிக்கப்பட்டதற்கு பெருமளவில் பாகிஸ்தானில் எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து, அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி, ரோமன் கத்தோலிக்க சபையும், ஆசியாவின் குடும்பமும் பிரித்தானியாவில் அவருக்கு அடைக்கலம் கோரினர்.

19 கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் சகாக்களும் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ஆசியா பீபியை பிரித்தானியாவுக்கு வர அனுமதிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

பிரித்தானியா, ஆசியா பீபிக்கு அடைக்கலம் தராதது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ள பிரித்தானிய பாகிஸ்தான் கிறிஸ்தவ கூட்டமைப்பைச் சேர்ந்த Wilson Chowdhry, சித்திரவதைக்குள்ளாக்கப்படுவோருக்கு அடைக்கலம் கொடுக்கும் பெரிய வரலாற்றுப் பின்னணி கொண்ட நமது வெளியுறவு அலுவலகம், சமீப காலமாக நடந்து கொள்ளும் முறை குறித்து பிரித்தானியர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இறைதூஷணம் கூறியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசியா பீபி ஏற்கனவே 8 ஆண்டுகள் பாகிஸ்தான் சிறையில் கழித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்