உளவாளி என கைது செய்யப்பட்ட பிரித்தானியர்: ஆறு மாத சிறைக்கு பின் விடுதலை செய்த ஐக்கிய அரபு அமீரகம்

Report Print Kabilan in பிரித்தானியா

ஐக்கிய அரபு அமீரகத்தில் உளவாளி என கைது செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மேத்யூ ஹெட்ஜ்ஸ் என்ற பிரித்தானியர் விடுவிக்கப்பட உள்ளார்.

பிரித்தானியாவைச் சேர்ந்தவர் மேத்யூ ஹெட்ஜ்ஸ்(31). ஆராய்ச்சி மாணவரான இவர், துபாயில் தனது ஆராய்ச்சிக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில்,கடந்த மே மாதம் 5ஆம் திகதி துபாய் விமான நிலையத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

ஐக்கிய அரபு அமீரகத்தை உளவு பார்த்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், தான் உளவுத்துறையான MI6-யில் கேப்டன் என அவர் கூறினார். ஆனால், MI6-யில் கேப்டன் என்ற பதவியே கிடையாது என்பது பின்னர் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான் பென் பிராட்ஷா மற்றும் Durham பல்கலைக்கழகம் ஹெட்ஜ்ஸ் ஒரு உளவாளி அல்ல என அமீரக அதிகாரிகளுக்கு உறுதியளித்தனர்.

மேலும், பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹண்ட், இது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்றும், இதனால் தீவிர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

அத்துடன், ஹெட்ஜ்ஸின் சிறைவாசம் லண்டன் மற்றும் அபு தாபி இடையிலான உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதற்கிடையில், ஹெட்ஜ்ஸின் குடும்பத்தினர் அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என கருணை மனு ஒன்றை அளித்திருந்தனர்.

அதனை ஐக்கிய அரபு அமீரக அரசு ஏற்றுக்கொண்டது. வரும் டிசம்பர் 2ஆம் திகதி அந்நாட்டில் தேசிய தினத்தை கொண்டாடப்படுவதையொட்டி, 785 கைதிகள் பொதுமன்னிப்பு கொடுத்து விடுதலை செய்யப்பட உள்ளனர்.

இந்நிலையில் ஹெட்ஜ்ஸ்-வும் அன்றைய தினமே அவர்களுடன் சேர்த்து விடுதலை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மேத்யூ ஹெட்ஜ்ஸின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், ஹெட்ஜ்ஸ் மீதான குற்றச்சாட்டுக்களை தாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், விரைவாக இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹண்ட் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...