மாயமான கோடீஸ்வர கணவர்: காதலனுடன் சேர்ந்து மனைவி நடத்திய நாடகம்...பகீர் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் கோடீஸ்வரர் ஒருவர் காணாமல் போன நிலையில் அவரது மனைவியையும் காதலனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

Hertfordshire கவுண்டியை சேர்ந்தவர் வில்லியம் டெய்லர் (70). மிக பெரிய கோடீஸ்வரரான இவர் கடந்த மே மாதம் காணாமல் போனார்.

இது குறித்து பொலிசார் விசாரித்த வந்த நிலையில் டெய்லரின் மனைவி ஏஞ்சலா (52) மற்றும் அவரின் காதலன் பவுல் கெனான் (53) ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

இருவரும் சேர்ந்து டெய்லரை கொலை செய்து சடலத்தை மறைத்து வைத்துவிட்டதாக பொலிசார் கருதுகிறார்கள்.

கணவர் காணாமல் போனதால் சோகமாக இருப்பது போல ஏஞ்சலா நடித்து வந்த நிலையிலேயே பொலிசாரிடம் பிடிப்பட்டார்.

இதையடுத்து டெய்லரின் சடலத்தை தேடும் பணி நடைபெறுகிறது.

இதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் டெய்லர் - ஏஞ்சலா மகன்களான மைக்கேல் (23) மற்றும் வில்லியம் (18) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

பொலிசார் கூறுகையில், சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளோம்.

டெய்லரின் சடலம் இன்னும் கிடைக்கவில்லை, டெய்லரின் இரண்டாவது மனைவி தான் ஏஞ்சலா என கூறியுள்ளனர்.

டெய்லர் வீட்டருகில் வசிக்கும் நபர்கள் கூறுகையில், டெய்லர் காணாமல் போவதற்கு முந்தைய நாள் அவரின் தொலைபேசி எண் துண்டிக்கப்பட்டது.

அவரும், ஏஞ்சலாவும் இரண்டாண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள்.

இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டார்களா என்பது எங்களுக்கு தெரியாது என கூறியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஏஞ்சலாவும் அவர் காதலர் பவுலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உண்மை நிலையை அறிய அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்