பிரித்தானியாவில் ஜனவரி 15 இல் பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பு

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
பிரித்தானியாவில் ஜனவரி 15 இல் பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பு

பிரதமர் தெரேசா மே-யின் பிரெக்ஸிற் வரைவு மீதான வாக்கெடுப்பு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி நாடாளுமன்றில் நடத்தப்படுமென உத்தியோகபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த பிரெக்ஸிற் வரைவு மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு, நிராகரிக்கப்படக்கூடுமெனும் அச்சத்தில் பிரதமரால் ஒத்திவைக்கப்பட்டது.

மார்ச் மாதம் 29 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறவுள்ள நிலையில் வெவ்வேறு கட்சிகளை சார்ந்த 200 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்க்குமாறு கோரி பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது தமது வரைவு நிராகரிக்கப்பட்டால் பிரித்தானியா நிச்சயமற்ற நிலையை எதிர்நோக்க நேரிடுமென பிரதமர் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரெக்ஸிற் வரைவு மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு ஜனவரி 15 ஆம் திகதியளவில் நடத்தப்படுமெனவும், மறுபடியும் பிற்போடப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க விரும்பும் பிரித்தானியர்கள்!

பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதையே விரும்புவதாகவும் பிரெக்ஸிற் தொடர்பான இறுதிமுடிவை தாங்களே தீர்மானிக்க விரும்புவதாகவும் நேற்றையதினம் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 29 ஆம் திகதி பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறவுள்ள நிலையில் தமது ஒப்பந்தத்துக்கான நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெறுவதற்கு பிரதமர் தெரேசா மே போராடிவருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் YouGov நிறுவனத்தால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பெரும்பாலான பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக நிலைத்திருப்பதையே விரும்புவதாக தெரியவந்துள்ளது.

25000 பிரித்தானியர்களிடையே நடத்தப்பட்ட இக்கணக்கெடுப்பில் பெரும்பாலானோர் பிரெக்ஸிற் தொடர்பான இறுதி தீர்மானம் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்பின் மூலமாகவே எடுக்கப்படவேண்டும் என விரும்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனாலும் பிரெக்ஸிற் மீதான இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான தமது எதிர்ப்பை பிரதமர் தெரேசா மே நேற்றையதினம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் பின்னரும் பிரித்தானியர்கள் ஜேர்மனியில் தங்குவதற்கு அனுமதி!

பிரித்தானியா ஒப்பந்தம் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினாலும் ஜேர்மனியில் தங்கியுள்ள பிரித்தானியர்கள் தொடர்ந்தும் தமது நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்களென அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரெக்ஸிற்றின் பின்னரும் மூன்று மாத காலத்திற்கு தங்கள் வதிவிட உரிமையை பிரித்தானியர்கள் தக்கவைத்துக்கொள்ள முடியுமெனவும் அதன் பின்னர் வதிவிட உரிமையை நீடிப்பதற்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் ஜேர்மனியின் உள்துறை அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியர்கள் ஜேர்மனியில் வாழ்வதற்கு விண்ணப்பிப்பதில் எவ்வித தடைகளுமிருக்காது எனவும் ஜேர்மனியின் உள்துறை அமைச்சு உறுதியளித்துள்ளது.

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றின் போது ஏற்படக்கூடிய வான்வழிப் போக்குவரத்து இணைப்புகளுக்கான இடையூறுகளை கருத்திற்கொண்டு ஜேர்மனி அரசாங்கம் பிரித்தானிய அரசுடன் நெருங்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக ஜேர்மனியின் போக்குவரத்து அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிற் தொடர்பான மேலதிக திட்டங்களை முன்வைத்தார் பிரதமர் தெரேசா மே!

பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் வடக்கு அயர்லாந்திற்கான கூடுதல் முன்மொழிவுகளை முன்வைப்பது மற்றும் பாராளுமன்றத்துக்கு முக்கிய பங்கை வழங்குவது போன்ற மேலதிக திட்டங்களை செயற்படுத்தவுள்ளதாக பிரதமர் தெரேசா மே இன்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பிரெக்ஸிற் ஒப்பந்தம் தொடர்பாக மேலதிக உறுதிப்படுத்தல்களை பிரித்தானிய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற வாக்கெடுப்புக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பிய தலைவர்களுடனும் சக ஊழியர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், வரவிருக்கும் நாட்களில், நாம் என்ன செய்ய வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தைப் பற்றியது மட்டுமல்ல உள்நாட்டில் நாம் என்ன செய்ய முடியும் என்பது பற்றியதும் தான் எனவும் தெரேசா மே கூறினார்.

வட அயர்லாந்திற்கு சாதகமான குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பாராளுமன்றில் முன்மொழிவுகளை முன்வைக்கவுள்ளதாகவும் பிரதமர் உறுதியளித்தார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ள சந்தேகங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இன்னும் கூடுதலான உத்தரவாதங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் தெரேசா மே தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு கடிதம்

உடன்பாடற்ற பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை தவிர்க்குமாறு வலியுறுத்தி, பிரதமர் தெரேசா மே-க்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 200இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

அத்தோடு, பிரதமருடன் நாளைய தினம் சந்திப்பொன்றை நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

உடன்பாடற்ற பிரெக்ஸிற்றானது, பாரியளவில் வேலைவாய்ப்பு இழக்கப்படுவதற்கும் பொருளாதார வீழ்ச்சிக்கும் காரணமாக அமையுமென குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வருடம் இறுதிப்பகுதியில் அனுமதி வழங்கியது. எனினும், அதனை செயற்படுத்த பிரித்தானிய நாடாளுமன்றம் அனுமதி வழங்க வேண்டும். அதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் 14ஆம் அல்லது 15ஆம் திகதி இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்கள் அச்சம்!

பிரித்தானியா எவ்வித ஒப்பந்தமுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவது பல்கலைக்கழகங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையுமென பிரித்தானிய பல்கலைக்கழகங்களின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றால் ஏற்படக்கூடிய பாதிப்பிலிருந்து பிரித்தானிய பல்கலைக்கழகங்களை மீட்டெடுப்பதற்கு தசாப்தங்கள் தேவைப்படுமெனவும் இது மிகைப்படுத்தல் இல்லையெனவும் உயர்கல்வி தலைவர்களால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற், அறிவியல் ஆராய்ச்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன் பிரித்தானிய பொருளாதாரத்திற்கு பல்கலைக்கழகங்கள் வழங்கிவரும் £ 21 பில்லியன் பங்களிப்புக்கும் அச்சுறுத்தலாக அமையுமெனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான புதிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆராய்ச்சிகள் பாதிப்புக்குள்ளாகுமென 150 பிரித்தானிய பல்கலைக்கழகங்களின் தலைவர்கள் சார்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள கூட்டுக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers