Brexit : ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களால் அலட்சியப்படுத்தப்பட்ட தெரஸா மே, மூக்கறுபட்ட மேக்ரான்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

காரசாரமான உச்சி மாநாட்டின் முடிவில், தெரஸா மேயை அலட்சியப்படுத்திய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், அவரது ஒப்பந்தத்தை நிறைவேற்ற அக்டோபர் 31 வரை கால அவகாசம் கொடுத்துள்ளனர்.

பிரெக்சிட் தொடர்பான தனது ஒப்பந்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற உதவும்படி பிரித்தானிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ஜெரமி கார்பினுடன் பிரித்தானிய பிரதமர் தெரஸா மே பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், பிரெக்சிட் திகதியை ஜூன் 30 வரை தள்ளி வைக்கும்படி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களிடம் அவர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

ஆனால் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு பதிலாக, பிரெக்சிட் தொடர்பான தனது ஒப்பந்தத்தை, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒப்புக்கொள்ளச் செய்ய மே-யால் முடியுமானால், அதற்கு முன்னரே பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறலாம் என்றும், ஆனாலும் மீண்டும் அவரது விலகல் ஒப்பந்தத்தை (Withdrawal Agreement) பிரஸ்ஸல்ஸ் மறுபரிசீலனை செய்யாது என்றும், அயர்லாந்து தொடர்பான தனது முடிவை மாற்றிக் கொள்ளாது என்றும் அவருக்கு கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரெக்சிட் நீட்டிப்பை கடுமையாக எதிர்த்து வந்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடைய பயங்கரமான நிபந்தனைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் செவிசாய்க்காததால் அவர் மூக்கறுபட்டார்.

பிரஸ்ஸல்சில் பேசிய தெரஸா மே, தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த பிரெக்சிட் நீட்டிப்பு, கூடுமானால் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை சம்மதிக்க வைக்கும் பட்சத்தில், கூடியவிரைவில், சொல்லப்போனால், அடுத்த மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இன்று நாம் சம்மதித்துள்ள விடயத்தின் பொருள், நாம் ஜூன் 30க்கு முன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிவிடலாம் என்பதாகும் என்றார்.

நான் இந்த நீட்டிப்பைக் கேட்டுள்ளது ஏராளமான மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பது எனக்கு தெரியும் என்று கூறிய மே, இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், நாட்டின் நலன் கருதி ஒப்பந்தம் குறித்த ஒத்த ஒரு முடிவை எட்ட முயற்சிப்பதுதான் என்றார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers