இலங்கைக்கு சுற்றுலா செல்லாதீர்கள்: பிரித்தானியா எச்சரிக்கை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பயங்கரவாத அபாயம் குறையும் வரை பிரித்தானிய பொதுமக்கள் அங்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும் என வெளியுறவு அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 253 பேர் உயிரிழந்திருப்பதுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இலங்கை பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் இலங்கை செல்வது தொடர்பான தன்னுடைய பயண ஆலோசனையில் மாற்றம் செய்துள்ளது. வெள்ளிக்கிழமை முதல் தெற்காசிய நாடுகளுக்கு தங்களுடைய அத்தியாவசிய பயணங்களை பிரித்தானிய மக்கள் தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

வெளியுறவு செயலாளர் ஜெர்மி ஹன்ட் கூறுகையில், எனது முதல் முன்னுரிமை எப்போதும் வெளிநாடுகளில் வசிக்கும் பிரித்தானிய குடிமக்களின் பாதுகாப்பு மீது தான் இருக்கும்.

இந்த துயரத்திலிருந்து இலங்கை விரைவில் தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பும் என நாங்கள் நம்புகிறோம். பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் இலங்கை சுற்றுலாத்துறை அதன் கால்களை மீண்டும் பதிப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம் எனத்தெரிவித்துள்ளார்.

முக்கியமான இடங்களில் இன்னும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை வெளியிட்ட பின்னரே, பிரித்தானியா இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்