விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு 50 வாரங்கள் சிறை விதித்த பிரித்தானிய நீதிமன்றம்!

Report Print Kabilan in பிரித்தானியா
124Shares

ஜாமீன் விதிமுறைகளை மீறியதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் 50 வாரங்கள் சிறை விதித்துள்ளது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே(47), கடந்த 2006ஆம் ஆண்டு சுவீடனில் ‘விக்கிலீக்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். அமெரிக்க ராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை, தனது இணையதளத்தில் அசாஞ்சே வெளியிட்டதும் உலகளவில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டது.

இதனால் அவர் மீது கோபம் கொண்ட அமெரிக்கா, அவரை கைது செய்ய பலமுறை கைது செய்ய முயற்சித்தது. இதற்கிடையில் சுவீடனில் 2 பெண்களை அசாஞ்சே பாலியல் வன்புணர்வு செய்ததாக கடந்த 2010ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில், 2011ஆம் ஆண்டு சுவீடனில் இருந்து பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றார். ஆனால், சுவீடனின் வேண்டுகோளினால் பிரித்தானிய பொலிசாரால் கைது செய்யப்பட்ட அசாஞ்சே, பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

எனினும், இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் சுவீடனுக்கு அசாஞ்சேவை நாடு கடந்த பிரித்தானியா முடிவு செய்தது. அவ்வாறு தாம் ஒப்படைக்கப்பட்டால், சுவீடன் தன்னை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என்றும், அதன் பின் தனக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என்றும் அஞ்சிய அவர், 2012ஆம் ஆண்டு ஈகுவெடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார்.

அங்கு அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் எப்போது தூதரகத்தை விட்டு வெளியே வந்தாலும் பிரித்தானிய பொலிசார் அவரை கைது செய்வதாக எச்சரித்து இருந்தனர். இந்நிலையில், சர்வதேச நெறிமுறைகளை அசாஞ்சே தொடர்ந்து மீறி வருவதால், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த அடைக்கலத்தை திரும்பப் பெறுவதாக ஈக்குவடார் ஜனாதிபதி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி பிரித்தானிய பொலிசார் ஈகுவெடார் தூதரகத்தில் அதிரடியாக நுழைந்து, ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தின் ஜாமீன் விதிமுறைகளை மீறியதாக லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தன் மீதான குற்றச்சாட்டுக்கு கடிதம் மூலமாக பதிலளித்த அசாஞ்சே, ‘பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளுக்குள் சிக்கி சிரமப்படும் நான், இந்த நீதிமன்றத்தை அவமதித்தாக யாராவது கருதினால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன்’ என தெரிவித்தார்.

அதன் பின்னர், ஜாமீன் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அசாஞ்சேவுக்கு லண்டன் நீதிமன்றம் 50 வாரங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்