அதிகம் பேசப்படாத ஒரு நவயுக இனப்படுகொலை: ஆய்வு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இனப்படுகொலை என கூறப்படும் அளவுக்கு, அதிகம் துன்புறுத்தப்படும் ஒரு மத பிரிவினராக கிறிஸ்தவர்கள் ஆகியுள்ளனர் என ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்ட அந்த ஆய்வு, கிறிஸ்தவர்கள், தங்கள் கடந்த காலம் எங்கு தொடங்கியதோ அதே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தங்கள் மதமே காணாமல் போகும் அளவுக்கு துரத்தியடிக்கப்படுகிறார்கள் என்று கண்டறிந்துள்ளது.

அந்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ள மறைதிரு Philip Mounstephen, எந்தகாலத்தை விடவும் தற்காலத்தில்தான் இந்த துன்புறுத்தல் மிகவும் மோசமான அளவில் இருப்பதற்கு அதிர்ச்சியளிக்கும் விதத்திலான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மற்ற எந்த மதத்தினரைக் காட்டிலும் கிறிஸ்தவர்கள் அதிக நாடுகளில் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்த அவர், குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்லாமிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் துன்புறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது 50 நாடுகளில், 245 மில்லியன் கிறிஸ்தவர்கள் மிக அதிக அளவில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவதாக அவரது அறிக்கை கண்டறிந்துள்ளது, இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 30 மில்லியன் அதிகமாகும்.

குறிப்பாக சிரியா, ஈராக், எகிப்து, வட கிழக்கு நைஜீரியா, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் தாக்குதலுக்குள்ளாகிறார்கள்.

மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவ இனம் அழிக்கப்பட்டு வருவதை காணமுடிகிறது என்றும், உடனடியாக அரசின் உதவி தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வெளியுறவுச் செயலரான Jeremy Hunt கூறும்போது, சில நேரங்களில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவது அதிகம் கண்டுகொள்ளப்படுவதில்லை என்று கூறினார்.

இதற்கிடையில் Jeremy Hunt மேற்கொண்ட விசாரணையின் இறுதி வடிவம் இந்த கோடையில்தானே வெளியிடப்பட உள்ளது, அதில் இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று நடத்தப்பட்ட படுகொலைகள் குறித்த விடயங்களும் அடங்கும்.

எத்தியோப்பிய தலைநகரான அடிஸ் அபாபாவில் பேசிய Jeremy Hunt, கிறிஸ்தவர்கள் மீதான துன்புறுத்தல் என்று வரும்போது மட்டும் நாம் அதை பெரிதாக கண்டு கொள்வதில்லை என்று எண்ணுகிறேன் என்றார்.

நாம் ஒரு கிறிஸ்தவ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், காலனி ஆதிக்க கடந்த காலத்தை உடையவர்கள் என்பதாலும் கிறிஸ்தவர்களின் துன்புறுத்தலை குறித்து பேச வெட்கப்படுகிறோம் என்று எண்ணுகிறேன் என்றும் கூறினார் அவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்