பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவருக்கு குவியும் ஆதரவு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய மருத்துவர் ஒருவர் இஸ்லாமிய பெண் ஒருவரின் முகத்திரையை அகற்றக்கோரியதற்காக பணி செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், அவரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளக் கோரி விண்ணப்பங்கள் குவிகின்றன.

Derbyshireஐச் சேர்ந்த Dr Keith Wolverson (52) தன்னிடம் தனது மகளை அழைத்து வந்த ஒரு இஸ்லாமிய பெண்ணிடம், அவர் பேசுவது சரியாக புரியாததால், அவரது முகத்திரையை அகற்றும்படி கோரியிருக்கிறார்.

அந்த பெண்ணும் தனது முகத்திரையை அகற்றி மருத்துவரிடம் பேசியிருக்கிறார். ஆனால் அவர் சென்ற சிறிது நேரத்திற்கு பின் அங்கு வந்த அந்த பெண்ணின் கணவர், Wolversonஇன் நடத்தை குறித்து புகாரளிக்கப்போவதாக கூறியிருக்கிறார்.

அந்த புகாரில் Wolverson அந்த பெண்ணிடம் முகத்திரையை அகற்றக்கோரியதாகவும், ஆனால் தனது மதப்பின்னணி காரணமாக அவர் முகத்திரையை அகற்ற மறுத்து விட்டதாகவும், ஆனால் முகத்திரையை அகற்றினால் மட்டுமே தனது கன்சல்டேஷனை தொடரப்போவதாக மருத்துவர் கூறிவிட்டதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

Wolverson தன் மீதான புகாரை மறுத்துள்ளார். மருத்துவ கவுன்சில் தனக்கு அனுப்பிய ஒரு கடிதத்திலிருந்துதான் இந்த விடயத்தையே தான் தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார் அவர்.

அந்த கடிதத்தில் இனப்பாகுபாடு காட்டியதாக தான் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் பணியிலிருந்து நீக்கப்படலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பதால் தன்னால் தனது பணியில் இனி தொடர முடியாது என்று தெரிவித்துள்ள Wolverson, தான் மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு, அழகியல் சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரது ஆதரவாளர்கள் பலர் Wolversonஐ பணியிலிருந்து நீக்கக்கூடாது என்று கோரி அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

அத்துடன் அவரை பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும், மருத்துவ கவுன்சில் அவரை நியாயமாக நடத்த வேண்டும் என்றும், அனைத்து ஆதாரங்களையும் சரியாக கவனிக்குமாறும் கோரி மக்கள் ஆன்லைன் பெட்டிஷன் ஒன்றை துவங்கியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்