தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளிப்பெண்: பரிதாப பின்னணி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் சொந்த வீடு வாங்கிவிட வேண்டும் என்பதற்காக பல ஆண்டுகள் பாடுபட்ட ஒரு இந்திய வம்சாவளிப்பெண், தனது வீட்டுக்குள் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பிரித்தானியாவில் கணித ஆசிரியையாக பணியாற்றும் இந்திய வம்சாவளியினரான ரேகா பட்டேல், அரும்பாடு பட்டு Glossop நகரில் ஒரு வீடு வாங்கினார்.

162,500 பவுண்டுகள் கொடுத்து வாங்கிய அந்த வீட்டை புதுப்பிப்பதற்காக 30,000 பவுண்டுகள் செலவிட்டார் ரேகா.

ஒரு வழியாக நிம்மதியாக வீட்டில் குடியேறிய ரேகாவுக்கு பெரும் தொல்லை காத்திருந்தது, பக்கத்து வீட்டுக்காரர் உருவில்.

ரேகா தனது வீட்டை புதுப்பிக்கும்போது, வேலை செய்தவர்கள் தங்கள் வீட்டிலுள்ள 12 விலையுயர்ந்த டைல்ஸ்களை சேதப்படுத்தி விட்டதாக குற்றம் சாட்டினர் பக்கத்து வீட்டுக்காரர்கள்.

அன்று ஆரம்பித்தது தொல்லை!

ரேகாவை நீதிமன்றத்துக்கு இழுத்தனர் பக்கத்து வீட்டுக்காரர்கள்.

நீதிபதியும் அவர்களுக்கு ஆதரவாக, ரேகா பக்கத்து வீட்டிலுள்ள முக்கியமான கலையம்சம் கொண்ட பகுதியை நாசம் செய்து விட்டதாக கூறி, இழப்பீடு செலுத்த வேண்டும் என்றும், மேல் முறையீடு செய்ய அனுமதியில்லை என்றும் தீர்ப்பளித்து விட்டார்.

17,000 பவுண்டுகள் வரை இழப்பீடு செலுத்தியும் பிரச்சினை ஓயவில்லை.

2016ஆம் ஆண்டு, மீதி தொகையை செலுத்தவில்லை என்று கூறி வீட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் உத்தரவிட, வீட்டை விட்டு துரத்தப்பட்டார் ரேகா.

என்றாலும் அது தன் வீடு என்று கூறி வீட்டுக்குள் நுழைந்த ரேகாவை பொலிசார் கைது செய்தனர்.

வழக்குகள், இழுத்தடிப்பு, வீட்டுக்குள் செல்ல அனுமதி மறுப்பு என பல பிரச்சினைகளுக்குப்பின், ரேகா சட்டத்தை மீறி வீட்டுக்குள் நுழையவில்லை என்று தீர்ப்பாகிவிட்டாலும், அவர் அங்கு செல்வதால் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் ஐந்தாண்டுகளுக்கு ரேகாவுக்கு தனது வீட்டிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்