பிரித்தானியா பிரதமர் தெரசா மே பதவியிலிருந்து விலக என்ன காரணம்? அரசியல் வாழ்வில் வீழ்ந்தது எப்படி?

Report Print Santhan in பிரித்தானியா

ஐரோப்பா தொடர்பான சிக்கலில், கன்சர்வேடிவ் கட்சியினரால் பதவி விலக நிர்பந்திக்கப்பட்ட பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகிறார் தெரீசா மே.

மார்கரெட் தாட்சரை போன்று நிலையான ஓர் இடத்தை பிடித்த தலைவர்கள் பட்டியலில் தெரீசா மேவும் இணைகிறார்.

ஜூலை 2016ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் இருக்கும் டவுனிங் தெருவில் அவர் நுழைந்தபோது அவர் என்ன மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தாரோ நிச்சயமாக அதை ஏற்படுத்த முடியவில்லை.

அவர் பிரதமராக பதவி ஏற்ற போது கொண்டிருந்த, நாட்டில் பெரிதும் கண்டுகொள்ளாத பகுதிக்கு சென்றடைய வேண்டும், பிரிட்டிஷ் சமூகத்தில் நிலவும் "அநீதிகளை" சரி செய்ய வேண்டும் என்ற கொள்கைகள் எல்லாம் பிரிக்ஸிட் என்ற ஒற்றை வார்த்தையால் மழுங்கடிக்கப்பட்டுவிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறும் பிரிட்டனின் முடிவு, தனக்கு முன் பிரதமராக இருந்த டேவிட் கேமரன் காலத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கேற்பு வாக்கெடுப்பின் முடிவுகளை செயல்படுத்துவதற்காக அவர் எடுத்துக்கொண்ட விடாமுயற்சி ஆகியவைதான் தெரீசா மேவின் மூன்று வருட கால பிரதமர் பதவியை விளக்குகிறது.

அவரின் தீவிரமான விமர்சகரும்கூட, ப்ரஸல்ஸ் பேச்சுவார்த்தை மற்றும் நாடாளுமன்றம் கொடுத்த அவமானங்களை கடந்துவந்த தெரீசா மேயின் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது.

பிரெஸிட்டை நிறைவேற்றுவதற்கான போராட்டம்

நாடாளுமன்றத்தில் அமைச்சர்களின் பதவி விலகல் மற்றும் நாடாளுமன்றத்தில் எழுந்த எதிர்ப்பலைகள் அவருக்கு பின்னடைவை வழங்கியது.

கடினமான சூழ்நிலையிலும், தன்னைச் சுற்றி ஏற்பட்டிருந்த குழப்பத்தை கண்டுகொள்ளாமல், நாடாளுமன்றம் மற்றும் தனது கட்சியில் அதிகாரத்தை இழந்தாலும், தனது எம்பிக்களிடம் "எதுவும் மாறவில்லை" என்று தெரிவித்தும், பிரிட்டன் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்.

அவர் 2017ஆம் ஆண்டு பொது தேர்தலில் அவர் வெற்றிப் பெற்றிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும்.

ஆனால் பிரதமர் அலுவலகத்துக்கு வெற்றியுடன் வர வேண்டிய அவர், தனது எம்பிகளின் ஆதரவை இழந்து, வட அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் ஆதரவை நோக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.

வாக்களிக்க ஒப்புக் கொள்ளும் விதமான ஒரு ஒப்பந்தம் உருவாகும் வரைதான் மே பதவியில் இருக்க வேண்டும் என்று தனது கட்சியினர் விரும்பினர் என்ற அந்த நிலை ஏற்படுத்திய காயத்தில் இருந்து அவர் மீளவில்லை.

ஒரு தருணத்தில் தன் மீது கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க தனது கட்சியின் எம்பிக்களின் ஆதரவை பெற அடுத்த 2022ஆம் ஆண்டு தேர்தலுக்குள் தான் பதவி விலகுவதாக உறுதியளிக்க வேண்டியிருந்தது.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு பல எம்.பிகள் முட்டுக் கட்டை போடுகிறார்கள் என்று குற்றம் சுமத்தி அவர்களை தள்ளி வைத்த அவருக்கு, அவரின் கன்சர்வேடிவ் கட்சி அவர் பதவியில் தொடர்வதை விரும்பவில்லை என்று ஒப்புக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கடைசி தியாகம்

பிரஸல்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி தான் உருவாக்கிய ஐரொப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்காக ஒப்பந்தத்தை ஆதரித்தால் தான் பதவி விலகுவதாக அறிவித்தார்.

ஆனால் அவரால் நாடாளுமன்றத்தில் அந்த வரைவுக்கு ஒப்புதலை பெற முடியவில்லை.

ஜனவரி 2019 போது வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அவரின் ஒப்பந்தத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது.

அதன் பிறகு அந்த ஒப்பந்தத்தில் சிறிது மாற்றம் செய்து நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற முயற்சி செய்தார். ஆனால் இரண்டு முறையும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக விரும்பாதவர்கள் அந்த ஒப்பந்தம் மிகவும் கடினமானதாக உள்ளது என்றனர். கடும்போக்கு கன்சர்வேடிவ் கட்சியினர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முழுமையாக வெளிவர இது போதுமானதாக இருக்காது என்று தெரிவித்தனர்.

நாடாளுமன்ற ஒப்புதலை பெற அவர், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கோர்பினின் ஆதரவையும் கோரினார்.

ஆனால் ஆறு வாரகால பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தேர்தலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் என்று ஒப்புக் கொள்ள நேர்ந்தது அடுத்த அவமானமாக இருந்தது தெரீசா மேவுக்கு. ஒரு காலத்தில் அது ஒப்புக் கொள்ள முடியாத ஒன்று என தெரீசா மே தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது பல எம்.பிக்கள் அவரின் பேச்சை கேட்பதை விட்டுவிட்டனர். தாங்கள் விரும்பும் வகையிலான பிரெக்ஸிட்டுக்கு இவர் தடையாக இருப்பார் என அவர்கள் நினைத்தனர்.

இத்தனை நடந்ததற்கு பிறகு, அவர் நேசித்த பணியில் தொடர முடியாது என அவர் ஒப்புக் கொண்டார். மேலும் டவுனிங் தெருவில் தனது பணி நிறைவடைந்தது என்றும் ஒப்புக் கொண்டார்.

கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் விலகப் போவதாக அறிவித்த அவர், தான் பதவி விலகப்போவதாக அறிவித்த அந்த தருணத்தில் உடைந்துவிட்டார்.

ஜூன் 7ஆம் தேதி அவர் பதவியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறார்.

இனி கன்சர்வேடிவ் கட்சி புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

யார் இந்த தெரீசா மே?

பிறந்த தினம்: அக்டோபர் 1, 1956. வயது - 62

பணிகள்: 1997ஆம் ஆண்டிலிருந்து மேய்டென்ஹெட்டின் எம்.பியாக இருந்தார். உள்துறை செயலராக ஆறு வருட காலம் பணியாற்றிய பிறகு 2016ஆம் ஆண்டு பிரதமரானார்.

படிப்பு: வீட்லீ பார்க் பள்ளி. செயிண்ட் ஹூக், ஆக்ஸ்ஃபோர்ட்

குடும்பம்: கணவர் பிலிப்

பொழுது போக்கு: சமையல். அவரிடம் 150 சமையல் குறிப்பு புத்தகங்கள் இருப்பதாக ஒருமுறை தெரிவித்திருந்தார். விடுமுறை நாட்களில் மலையேறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார். ஃபேஷனில் மிகவும் ஈடுபாடு கொண்டவர் தெரீசா மே.

- BBC - Tamil

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்