லண்டனில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வரர்... இந்தியாவில் எந்த சிறையில் அடைக்கப்படுவார்? நீதிபதி கேள்வி

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் ஜுன் 27-ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு, வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த நிரவ்மோடி, லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று மூன்று முறை மனு அளித்த போது, அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

அவரது சிறைக்காவலும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது.

கடைசியாக அவரது ஜாமீன் மனுவை நிராகரித்தபோது, மே 24-ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்தது வழக்கின் முழுமையான விசாரணை மே 30-ஆம் திகதி நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்தது.

இதற்கிடையில் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது.

நிரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் நேற்று விசாரணை தொடங்கியது. அப்போது ஆஜரான நிரவ்மோடியின் நீதிமன்றக் காவலை ஜூன் 27-ஆம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 29-ஆம் திகதி நடைபெறும் எனவும் நிரவ் மோடி இந்தியாவில் எந்த சிறையில் அடைக்கப்படுவார்? என்ற தகவலை இந்திய அரசு 14 நாட்களுக்குள் தெரிவிக்கும்படியும் நீதிபதி கேட்டுக்கொண்டார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்