விக்கிலீக்ஸ் விவகாரத்தில் ஜூலியன் அசாஞ்சே நாடுகடத்தல்.. பிரித்தானியா கையெழுத்து!

Report Print Kabilan in பிரித்தானியா

விக்கி லீக்ஸ் விவகாரத்தில் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை, அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான உத்தரவில் பிரித்தானிய உள்துறைச் செயலர் சாஜித் ஜாவித் கையெழுத்திட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.

அமெரிக்காவின் அனுமதி இல்லாத ஆவணங்களையும், அரசு தகவல்கள் மற்றும் ரகசியங்களையும் விக்கிலீக்ஸ் மூலம் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அவர் மீது அமெரிக்க உளவுச் சட்டம் பாய்ந்துள்ளது. அனுமதி இல்லாத ஆவணங்கள், அரசு தகவல்கள், ரகசியங்களை அரசுத்துறை கணினியை ஹேக் செய்து வெளியிட்டார் உள்ளிட்ட பல சதி வழக்குகள் இவர் மீது உள்ளன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்த அசாஞ்சே, கருத்துரிமை மீதான தாக்குதல் என்று அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை விமர்சித்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த பிரித்தானியா கையெழுத்திட்டுள்ளது.

அங்கு அவர் கணினி ஹேக்கிங் வழக்கு உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக பிரித்தானிய உள்துறை செயலர் சாஜித் ஜாவித் கூறுகையில், ‘அவர் மிகச்சரியாகவே கம்பிகளுக்குப் பின்னால் உள்ளார்.

அவரை நாடுகடத்துமாறு அமெரிக்கா கோரிக்கை வைத்தது. இது வெள்ளியன்று நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. ஆனால், நான் புதன் அன்று நாடுகடத்துவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டேன். சான்றிதழும் அளித்து விட்டேன். நாளை இது நீதிமன்றத்திற்கு செல்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘இது நீதிமன்றங்களினால் தீர்க்கப்பட வேண்டியுள்ளது. எங்களுக்கு இந்த விஷயத்தில் நியாயமான நாடுகடத்தல் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆகவே, நான் அதில் கையெழுத்திட்டேன். ஆனால் இறுதி முடிவு நீதிமன்றத்தில் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நீதித்துறையினால் ஜூலியன் அசாஞ்சே மீது 18 குற்றாச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இப்போது அசாஞ்சே உயர் பாதுகாப்பு லண்டன் பெல்மார்ஷ் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers