இறுதிச்சுற்றில் இரண்டே வேட்பாளர்கள்.. பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் இவர்களில் ஒருவர் தான்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பின் ஐந்தாவது சுற்று முடிவு வெளியாகி இறுதிச்சுற்றில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பிரதமர் பதவியிலிருந்து கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் தெரசா மே விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 10 வேட்பாளர்கள் குதித்தனர்.

முதல் சுற்று முடிவில் மொத்தம் உள்ள 313 வாக்குகளில் போரிஸ் ஜான்சன் 114 வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார். அவரை தொடர்ந்து ஜெர்மி ஹன்ட் 43, மைக்கேல் கோவ் 37, ராப் 27, ஜாவத் 23, ஸ்டீவர்ட் 19 வாக்குகள் பெற்று அடுத்து சுற்றுக்கு முன்னேறினர்.

முதல் சுற்றில் கடைசி நான்கு இடங்களை பிடித்த ஹான்காக், மார்க் ஹார்பர், ஆண்ட்ரியா லட்ஸம் மற்றும் எஸ்தர் மெக்வீ போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இரண்டாவது சுற்று முடிவில் 30 வாக்குகள் பெற்று கடைசி இடத்தை பிடித்த ராப் வெளியேறினார். மூன்றாவது சுற்றில் 27 வாக்குகள் பெற்று ஸ்டீவர்ட் வெளியேறினர். நான்காவது சுற்று முடிவில் 34 வாக்குகள் பெற்று கடைசி இடத்தை பிடித்த பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவத் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

3 வேட்பாளர்கள் போட்டியிட்ட ஐந்தாவது சுற்று வாக்கெடுப்பின் முடிவில் 160 வாக்குகள் பெற்று போரிஸ் ஜான்சன் முதல் இடத்தை பிடித்தார். ஜெர்மி ஹன்ட் 77 வாக்குள் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

75 வாக்குகள் பெற்ற மைக்கேல் கோவ் போட்டியிலிருந்து வெளியேறினார். ஐந்தாவது சுற்றில் ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. இறுதிச்சுற்றில் போரிஸ் ஜான்சன், ஜெர்மி ஹன்ட் போட்டியிடுகின்றனர்.

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கும் இறுதிச்சுற்றின் வாக்கெடுப்பில் கன்சர்வேடிவ் கட்சியின் 160,000 உறுப்பினர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பார்கள். அடுத்த பிரதமரின் பெயர் யூலை 22ம் திகதி அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்