மூன்று இந்திய வம்சாவளியினருக்கு புதிய பிரித்தானிய பிரதமர் கொடுத்துள்ள கௌரவம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
218Shares

பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள போரிஸ் ஜான்சன், மூன்று இந்திய வம்சாவளியினருக்கு தனது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் அளித்து கௌரவம் செய்துள்ளார்.

ப்ரீத்தி படேலை (47) உள்துறைச் செயலராக்கிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜூனியர் அமைச்சராக இருந்த அலோக் ஷர்மாவை (51) சர்வதேச மேம்பாட்டுத்துறையில் கேபினட் அமைச்சராக்கியுள்ளார்.

அலோக் ஷர்மாவுக்கு சர்வதேச மேம்பாட்டுத்துறையில் secretary of state என்னும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தீவிர பிரெக்சிட் ஆதரவாளரும் ஜான்சனின் ஆதரவாளருமான ப்ரீத்தி பட்டேலுக்கு உள்துறைச் செயலர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களுடன், புலம்பெயர்தலும் அவர் பொறுப்பில் வருகிறது.

முன்னாள் பிரதமர் தெரஸா மே, 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் பட்டேலை சர்வதேச மேம்பாட்டுத்துறை செயலராக்கினார்.

என்றாலும் 2017ஆம் ஆண்டு நவம்பரில் பட்டேல் விடுமுறையில் இஸ்ரேல் சென்றிருந்தபோது, இஸ்ரேல் அரசுடன் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புகளை நிகழ்த்தியதையடுத்து அவரது பதவி பறிக்கப்பட்டது.

சர்வதேச மேம்பாட்டுத்துறை செயலராக அலோக் ஷர்மா வெளிநாடுகளுக்கு நிதியுதவி செய்யும் விடயங்களுக்கு பொறுப்பாகிறார்.

ஆக்ராவில் பிறந்த ஷர்மா, தெரஸா மே அரசில் வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக இருந்தார்.

சமீபத்திய கன்சர்வேட்டிவ் தலைவர் தேர்தலில் அவர் ஜான்சனுக்கு முக்கிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார்.

தெரசா மே அரசில், ஜான்சன் வெளியுறவுச் செயலராக இருந்தபோது, வெளியுறவு அலுவலகத்தில் ஜூனியர் under secretary of state என்னும் பொறுப்பு வகித்தார் ஷர்மா.

ஆசிய பசிபிக் மண்டலத்துக்கு அவர் பொறுப்பாக இருந்தார்.

தனது அமைச்சரவைக்கான குழுவை அமைக்கும் நடவடிக்கையை தொடங்கிய போரிஸ் ஜான்சன், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக்குக்கு (39) கருவூலத்தின் தலைமைச் செயலராக பதவி உயர்வு வழங்கியுள்ளார்.

ஹாம்ப்ஷையரில் பிறந்த சுனக், தெரஸா மேயின் அமைச்சரவையில் ஜூனியர் அமைச்சராகத்தான் இருந்தார், இப்போது கருவூலத்தின் தலைமைச் செயலராக இருப்பதால் கேபினட் கூட்டங்களில் பங்கு கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது.

பட்டேல், ஷர்மா மற்றும் சுனக் ஆகிய மூன்று இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளைக் கருத்தில் கொண்டால், 1.5 மில்லியன் இந்தியர்கள் வாழும் பிரித்தானியாவில், மூன்று இந்திய வம்சாவளியினர் பிரித்தானிய பிரதமரின் கேபினட்டில் பங்கேற்பது இது முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்