இளவரசர் ஜார்ஜை நெருங்கிய குற்றப்பின்னணி கொண்ட நபர்: பிரித்தானிய அரண்மனையில் பரபரப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஒருவரை கத்தியால் குத்தி, அவரது உடலில் கொதிக்கும் நீரை ஊற்றி, அடித்து சித்திரவதை செய்ததற்காக கைது செய்யப்பட்ட ஒரு கொடூர குற்றவாளி, பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய குழந்தைகள் அருகில் வந்த தகவல், அரண்மனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2008ஆம் ஆண்டு Wolverhamptonஇல் அந்தோனி பவல் என்னும் ஒருவரை, தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து சித்திரவதை செய்ததற்காக, பெஞ்சமின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

முகமூடி அணிந்த பெஞ்சமினும் அவரது நண்பர்கள் இருவரும், அந்தோனியின் காலில் கத்தியால் குத்தி, அவரது உடலில் கொதிக்கும் நீரை ஊற்றியதோடு, அடித்து துவைத்து, சுமார் 20 நிமிடங்களுக்கு சித்திரவதை செய்துள்ளனர்.

இதே பெஞ்சமின் தான் இப்போது அரண்மனைக்குள் சென்றுள்ளார். தனது நண்பர்களிடம், வருங்கால மன்னராகிய இளவரசர் ஜார்ஜ், சார்லட் மற்றும் லூயிஸ் ஆகியோரை தான் எப்படி மிக அருகில் பார்த்தேன் என்பது குறித்து பெருமையடித்துக் கொண்டதைக் கேட்டு திகிலடைந்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார்.

தான் குற்றப்பின்னணி கொண்டவராக இருந்தும் அரண்மனைக்குள் சென்றதோடு, ராஜ குடும்ப குழந்தைகளுக்கு அருகில் வேறு சென்றதாக பெஞ்சமின் கூறியதைக் கேட்டு அவரது நண்பர்களே அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வருங்கால மன்னர் ஜார்ஜ் பார்வைக்கு இனிமையானவராக இருந்ததாக பெஞ்சமின் அவரது நண்பர்களிடம் கூறியதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அப்படிப்பட்ட குற்றப்பின்னணி கொண்டஒரு நபர் எப்படி அரண்மனைக்குள் வந்தார் என்று பார்க்கும்போது, ஏழு ஆண்டுகள் சிறையிலிருந்த பெஞ்சமின், தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிவதாகவும், சில மரச்சாமான்களை அரண்மனைக்கு டெலிவரி செய்வதற்காக, அவர் அந்த நிறுவனத்தின் வாகனத்தில் அரண்மனைக்குள் வந்ததாகவும், அப்போதுதான் அவர் இளவரசர் வில்லியமுடைய குழந்தைகளைப் பார்த்ததாகவும் தெரியவந்தது.

குற்றப்பின்னணி கொண்ட ஒருவர் அரண்மனைக்குள் நுழைந்ததாக தெரியவந்துள்ளதையடுத்து, உடனடியாக பாதுகாப்பு அமைப்புகள் சரியாக உள்ளனவா, முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து சோதிப்பதற்காக அவசர மீளாய்வு ஒன்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரண்மனை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்