மகள் இறந்த விடயம் எங்களுடைய இதயத்தையே சுக்குநூறாக நொறுக்கிவிட்டது என மலேசியாவில் சடலமாக மீட்கப்பட்ட நோராவின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.
லண்டனை சேர்ந்த மீப் - செபாஸ்டியன் தம்பதியினரின் 15 வயது மகள் நோரா கடந்த 14ம் திகதியன்று அவர்கள் தங்கியிருந்த அறையிலிருந்து திடீரென மாயமானார்.
அவரை தேடும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார், மீட்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூரை சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஒரு வார தேடுதல் வேட்டைக்கு பின் நோராவின் உடல் அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் மட்டுமே உள்ள நீர் வீழ்ச்சியின் அருகே கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து நோராவின் உடலைக் கண்டறிந்த தன்னார்வத் தொண்டர்கள் குழுவில் ஒரு பகுதியாக இருந்த சீன் யீப் கூறுகையில், தேடல் குழுக்கள் முதலில் கடந்து செல்லும் போது நோரா அந்த இடத்தில் இல்லை என்று தான் நம்புவதாகக் கூறினார்.
நாங்கள் தேடிக்கொண்டிருந்த சமயத்தில் அவர் வேறு இடத்தில் இருந்திருக்கலாம். அதன்பிறகு தண்ணீர் அருந்துவதற்காக அந்த ஓடை பகுதிக்கு அவர் வந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் கால்தடங்கள் எதுவும் இல்லை. அதிக ஆழம் இல்லாததால் அவள் நீரிலே நடந்து சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நோராவின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முடிந்தவரை நோராவை தேடி கண்டுபிடிக்க முயன்ற அனைவருக்கும் நன்றி. இந்த நேரத்தில் இங்குள்ள உள்ளூர் மக்களுக்கும், தொலைதூரத்திலிருந்தும் பிரார்த்தனை செய்து ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
எங்களுடைய குடும்பத்தில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்கள் அன்பிற்கு போதுமான நன்றி கூற முடியாது.
நோரா எங்கள் குடும்பத்தில் மிகவும் விலைமதிப்பற்ற பெண். நாங்கள் அவளை எல்லையற்ற அளவில் நேசிக்கிறோம். அவள் எங்களிடம் இருந்து பிரிந்து சென்றதும் இதயமே உடைந்துவிட்டன என குறிப்பிட்டுள்ளனர்.