நடுவானில் மயங்கிய பிரித்தானிய விமானி: ஹீரோவாக பயணிகளை காப்பாற்றிய நபர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மான்செஸ்டரிலிருந்து மடைரா என்னும் தீவு நோக்கி புறப்பட்ட பிரித்தானிய விமானம் ஒன்றின் விமானி திடீரென மயக்கமடைந்த நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த விடுமுறையிலிருந்த மற்றொரு விமானி ஹீரோவாக விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

மான்செஸ்டரிலிருந்து மடைரா என்னும் தீவு நோக்கி பிரித்தானிய விமானம் ஒன்று புறப்பட்ட நிலையில், சற்று தூரம் சென்றதும் விமான ஊழியர்கள் திடீரென பரபரப்படைந்துள்ளனர்.

விமான ஊழியர்கள் அனைவரும் தங்கள் அறைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட, குளிர்பானங்கள் முதலானவை வழங்குவது நிறுத்தப்பட்டு, அனைத்து ஊழியர்களும் தங்கள் அறையில் கூடியுள்ளனர்.

மக்கள் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் திகைத்துப் போயிருக்க, அப்போது, ஒரு ஊழியர், பயணி ஒருவரிடம் சென்று ஏதோ கூற, அவர் எழுந்து விமானியின் அறைக்குள் சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் ஒரு சிறு மருத்துவ அவசரம் காரணமாக, விமானம் அருகிலுள்ள போர்ட்டோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட இருப்பதாக விமான ஊழியர்கள் பயணிகளுக்கு அறிவித்துள்ளனர்.

பின்னர் பத்திரமாக விமானம் தரையிறங்கவும், ஒரு சக்கர நாற்காலி கொண்டு வரப்பட்டு அதில் ஒருவர் அமர்த்தப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதன் பின்புதான், விமானத்தை ஓட்டிய விமானி, பாதி வழியிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு மயங்கிய விடயம் வெளிவந்திருக்கிறது.

அதிர்ஷ்டவசமாக, அதே விமானத்தில் விடுமுறையிலிருந்த மற்றொரு விமானி பயணம் செய்திருக்கிறார்.

விமான ஊழியர்கள் அவரிடம் சென்று உதவி கோர, அந்த விமானிதான் ஹீரோவாக விமானத்தை பத்திரமாக தரையிறக்கியிருக்கிறார்.

அவர் மட்டும் அந்த விமானத்தில் இல்லையென்றால் இந்த செய்தி வேறு மாதிரியாக வெளிவந்திருக்க வாய்ப்புள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...