இளவரசர் ஜார்ஜை கேலி செய்த தொலைக்காட்சி பிரபலம்: பதிலுக்கு நூற்றுக்கணக்கானோர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஜார்ஜுக்கு பாலே நடனம் ஆடுவது பிடிக்கும் என பேட்டி ஒன்றில் அவரது தந்தையான இளவரசர் வில்லியம் குறிப்பிட்டதை, ஒரு அமெரிக்க தொலைக்காட்சி பிரபலம் கேலி செய்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

குட்டி இளவரசர் ஜார்ஜின் பாடத்திட்டத்தில் 35 நிமிட பாலே நடனமும் அடங்கும்.

அது குறித்து பேசியிருந்த இளவரசர் வில்லியம் தனது மகன் ஜார்ஜுக்கு பாலே நடனம் மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார்.

அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியான Good Morning America என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியான Lara Spencer என்பவர் கடந்த வியாழனன்று, இளவரசர் ஜார்ஜின் பாலே வகுப்புகள் குறித்து கேலி செய்திருந்தார்.

பிரித்தானியாவின் வருங்கால மன்னர் ஜார்ஜ் பாலே நடனம் கற்கிறாராம், அவரது தந்தை, ஜார்ஜுக்கு பாலே நடனம் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார், இளவரசர் வில்லியம், உங்களுக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன், எவ்வளவு நாள் இந்த நடன பயிற்சி நீடிக்கும் என்று பார்க்கலாம் என நக்கலாக சிரித்தவாறே Lara கூற, அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்றவர்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

ஆனால் பிரித்தானிய இளவரசரை Lara கேலி செய்ததோடு, ஆண்கள் நடனம் ஆடுவதையும் விமர்சித்ததையடுத்து, அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு உருவானது.

அதன் ஒரு பகுதியாக, இளவரசர் ஜார்ஜுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், ஆண்கள் நடனமாடுவதை விமர்சித்ததற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலும், டைம்ஸ் சதுக்கத்தில் Good Morning America என்னும் நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்படும் ஸ்டுடியோவுக்கு எதிரே கூடிய நூற்றுக்கணக்கானோர் கூடி பாலே நடனம் ஆடி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

எதிர்ப்பு உருவானதையடுத்து, திங்களன்று Lara வெளிப்படையாக மன்னிப்புக் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், பலரும், அவரது மன்னிப்பு போலியானது, அப்படி அவர் உண்மையாகவே வருந்தியிருந்தால் நூற்றுக்கணக்கானோர் நடனமாடும் அந்த போராட்டத்தை தனது நிகழ்ச்சியில் காட்டியிருக்கலாமே என்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்