எங்கள் குழந்தைகளின் DNA எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்கு தெரியாது: ஒரு வித்தியாசமான செய்தி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியரான Lisa Kitching (35)இன் மகன் Joseph, ஒருநாள் தான் ஸ்பெயினில் வாழ விரும்புவதாக தெரிவிக்க, ஆச்சரியத்தில் மூழ்கினார் அவர்.

அவர் ஆச்சரியப்படுவதன் பின்னணியில் ஒரு பெரிய கதை இருக்கிறது! Jamie(39), அவரது மனைவி Lisa இருவருக்கும் திருமணமாகி ஓராண்டாகியும் குழந்தை பிறக்கவில்லை.

மருத்துவப்பரிசோதனையில் Jamieக்கு தந்தையாகும் பாக்கியம் இல்லை என்பது தெரியவர அதிர்ந்துபோனார் அவர்.

அவருக்கு ஆறுதல் கூறி, செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என உற்சாகப்படுத்திய அவரது மனைவி Lisa, உயிரணு தானம் பெற்று கருவுற முயற்சிக்கும்போதுதான், அவராலும் கருமுட்டைகளை உருவாக்க முடியாது என்ற உண்மை தெரியவந்தது.

அவ்வளவுதான், தங்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை என சோர்ந்துபோன தம்பதி, கரு தானம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார்கள்.

அதாவது உயிரணுவும் கருமுட்டையும் சேர்ந்து செயற்கை முறையில் கருவூட்டப்பட்ட கருவை பிற்கால தேவைக்காக ஆய்வகத்தில் சேர்த்து வைத்திருப்பார்கள்.

அந்த பெற்றோருக்கு அது தேவையில்லை என்றால், அந்த கரு, தானம் செய்யப்படும். அதாவது இன்னொருவரின் குழந்தையை தத்தெடுத்துக் கொள்வது போன்ற ஒரு விடயம் இது.

பார்சிலோனாவுக்கு சென்று கரு தானம் பெற்று கருவுற முயன்றிருக்கிறார்கள் தம்பதியர்.

முதல் இரண்டு முயற்சிகள் தோல்வியடைய, மூன்றாவது முயற்சியில் Lisa கருவுற, தம்பதிக்கு ஒரே மகிழ்ச்சி. Joseph என்னும் குட்டிப்பையன் பிறந்தான்.

அவனை பார்த்தவர்கள் அப்பாவைப்போலவே இருப்பதாக கூறினார்கள், அவர்களுக்கு உண்மை தெரியாது, எனவே தம்பதிக்கு கூடுதல் மகிழ்ச்சி! அடுத்தது Josephக்கு ஒரு சகோதரனோ சகோதரியோ வேண்டும் என ஆசைப்பட்டார்கள் தம்பதியர்.

மீண்டும் பார்சிலோனாவில் அதே ஆய்வகத்திற்கு சென்றபோது, ஏற்கனவே தானம் பெற்ற கருவுக்கு சொந்தமான பெற்றோரின் கரு வேறு எதுவும் மிச்சம் இல்லை என்பது தெரியவந்தது.

எனவே இன்னொரு பெற்றோர் தானம் செய்திருந்த கருவை பெற்று கருவுற்றார் Lisa. Leon பிறந்தான்.

பார்ப்பதற்கு அவன் அம்மாவைப்போலவே இருக்க, தம்பதிக்கு போனஸ் மகிழ்ச்சி! இப்படியிருக்கும் காலகட்டத்தில்தான், ஒரு நாள், Joseph, தான் ஸ்பெயினுக்கு சென்று வாழ விரும்புவதாக தெரிவித்தான்...

ஆம், அவனது கரு பார்சிலோனாவில்தான், அதாவது ஸ்பெயினிலுள்ள ஒரு ஆய்வகத்திலிருந்துதான் பெறப்பட்டிருந்தது! எனவே, அவனது பெற்றோர் ஸ்பெயினை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும், அதனால்தான், அவன் தானாகவே ஸ்பெயினை விரும்புகிறான் என்று உணர்ந்தபோது Jamieக்கும் அவரது மனைவி Lisaவுக்கும் புல்லரித்துப்போனது.

அவர்களது DNA எங்கிருந்து வந்தது என்பது எங்களுக்கு தெரியாது என்று கூறும் தம்பதி, மெதுவாக, தங்களுக்கு கருக்களை தானம் அளித்தவர்கள் குறித்து பிள்ளைகளிடம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் ஒரு குறிப்பிட்ட விடயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இப்படி தானம் பெறப்பட்ட உயிரணு அல்லது கருவைக் கொண்டு பிறக்கும் குழந்தைகள் பின்னாட்களில் யாரையாவது காதலிக்கும்போது, அவர்கள் தங்கள் சொந்த சகோதர சகோதரியாக இருந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.

எனவே இப்படி பிறக்கும் குழந்தைகள் DNA பரிசோதனை செய்யும்போது அதை தவிர்க்கலாம் என்பது இந்த பெற்றோரின் எண்ணம்!

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்