பிரித்தானியா மகாராணியிடம் மன்னிப்பு கேட்டார் போரிஸ் ஜான்ஸன்... எதற்காக தெரியுமா? வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in பிரித்தானியா
475Shares

பிரித்தானியா நாடாளுமன்றம் முடக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மகாராணியிடம் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மன்னிப்பு கேட்டார்.

இந்த விவகாரத்தில் மகாராணியை தவறாக வழிகாட்டியதாக போரிஸ் ஜான்ஸன் மீது அதிருப்தி நிலவி வந்த சூழலில், அரசியிடம் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

இது குறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், நாடாளுமன்றத்தை முடக்கி வைத்தது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அதுதொடர்பாக அரசி எலிசபெத்திடம் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மன்னிப்பு கேட்டார்.

தீர்ப்பு வெளியான பிறகு மகாராணியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர், அவரிடம் தனது வருத்தத்தை பதிவு செய்தார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகிய பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே சிறப்பு வர்த்தக உறவை பேணுவதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தும் விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்தச் சூழலில், அத்தகைய ஒப்பந்தம் ஏற்பட்டாலும், ஏற்படாவிட்டாலும் இறுதித் தேதியான அக்டோபர் 31-ஆம் திகதிக்குள் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதில் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் உறுதியாக உள்ளார்.

எனினும், சிறப்பு ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்ஸிட் நிறைவேறினால், அது பிரித்தானியா பொருளாதாரத்தை மிகக் கடுமையாக பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

எனவே, ஒப்பந்தம் எட்டப்படும்வரை பிரெக்ஸிட் காலக் கெடுவை நீட்டிக்க பெரும்பாலான எம்.பி.க்கள் விரும்புகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கடந்த 9-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 14-ஆம் தேதி வரை முடக்கி வைக்க மகாராணி எலிசபெத்திடம் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் அனுமதி கோரினார்.

தனது அரசின் திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மகாராணி உரையாற்றிய பிறகு நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு வசதியாக, 5 மாதங்களுக்கு நடாளுமன்றத்தை முடக்கி வைக்க முடிவு செய்துள்ளதாக மகாராணியிடம் அவர் விளக்கமளித்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட அரசி, நாடாளுமன்ற முடக்கத்துக்கு சம்மதம் தெரிவித்தார். அதையடுத்து, நாடாளுமன்றம் கடந்த 9-ஆம் திகதி முடக்கப்பட்டது.

எனினும், அது சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடியாக அறிவித்தது. இது தொடர்பாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரெக்ஸிட் எதிர்ப்பு பிரசாரகர் ஜீனா மில்லர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பை வழங்கியது.

நாடாளுமன்ற முடக்கத்துக்காக போரீஸ் ஜான்ஸன் தெரிவித்த காரணமும் சட்டப்பூர்வமாக ஏற்கும்படி இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இதன் மூலம், இந்த விவகாரத்தில் மகாராணியை போரீஸ் ஜான்ஸன் தவறாக வழிநடத்தியதாக நீதிமன்றம் மறைமுகமாகக் குறிப்பிட்டது. இது, அரசு மாளிகை வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழலில், இதுதொடர்பாக போரிஸ் ஜான்ஸன் மகாராணியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்