அன்று இதனால் தான் அம்மா டயானாவை இழந்தேன்.. இன்று மனைவி மேர்கலை குறிவைக்கிறார்கள்! ஹரி வேதனை

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரி, பிரபல நாளிதழ் மீது வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில், அன்று நான் ஊடகங்களால் தான் என் அம்மாவை இழந்தேன், இன்று நான் என் மனைவியை இழக்க விரும்பவில்லை என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

பிரபல ஆங்கில நாளிதழான mail on sunday இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மார்கல், தன் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒன்றை இளவரசியின் எந்த அனுமதியும் இன்றி வெளியிட்டுள்ளது.

இதனால் இளவரசர் ஹாரி அந்த நாளிதழுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இது குறித்து ஹரி கூறுகையில், அரச குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற முறையில் நானும் எங்களின் மொத்த தலைமுறையும் ஊடகத்துக்குப் பதில் சொல்லவும், அரச குடும்ப செய்திகளை அறிக்கைகளாக வெளியிடவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இருப்பினும், சில ஊடகங்களின் செயல்பாடுகள் எங்களை மனதளவில் கொடுமைப்படுத்துவதாக உள்ளது.

என் மனைவி கருத்தரித்திருந்தபோது, அந்தச் செய்தியை எங்களின் அரச குடும்பத்தின் சார்பாக நாங்களே பொதுமக்களுக்குத் தெரிவித்தோம்.

ஆனாலும், எங்களைச் சுற்றி வதந்திகள் இருந்துகொண்டே இருந்தன. எங்களின் குழந்தை பிறந்த நேரத்தில் குழந்தையின் பெயர் இது, அது என்று பல வதந்திகளை ஊடகங்கள் வெளியிட்டன.

அதுமட்டுமின்றி, என் மனைவியின் தந்தை உட்பட நாங்கள் எங்கு சென்றாலும் ஊடகங்கள் அதைச் செய்திகளாக மாற்றிவிடுகின்றன.

ஊடகங்கள் தங்களை வளர்த்துக்கொள்வதற்காக நாங்கள் எங்கள் நிம்மதியை இழந்துகொண்டிருக்கிறோம். ஆனால் அந்த வதந்திகள் எல்லாம் உண்மையில்லை என்பது எங்களுக்கு தெரியும்.

இதனால் ஒவ்வொரு முறையும் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்க முடியுமா? என்னதான் மறுப்பு கொடுத்தாலும், நாங்கள் அடைந்த மன பாதிப்பு இல்லை என்று ஆகிவிடுமா, உண்மையை கூற வேண்டும் என்றால், ஊடகங்கள் கிளப்பிய பல வதந்திகளால் தான் நான் என் அம்மாவை இழந்தேன்.

இப்போது அதே நிலை தான் என் மனைவிக்கும் வருகிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,

அரச குடும்பத்தில் பிறந்தற்காக நான் நேசிக்கும் எத்தனை பேரைத்தான் இழக்க வேண்டும்?

கடிதம் எழுதுவது என்பது மேகனின் தனிப்பட்ட உரிமை. ஒரு மகளாக அவர், தன் தந்தைக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. மார்கல் எழுதிய கடிதத்தை மேகனின் அனுமதியில்லாமல் வெளியிட்டதே தவறு. அதிலும், சில திருத்தங்களைச் செய்து வெளியிட்டு, மேகனின்மீது அவதூறு பரப்புகிறார்கள்.

அரச குடும்ப வாரிசாக இல்லாமல், தனிப்பட்ட ஒரு மனிதனாக இருந்து எங்களுக்கான நியாயத்தை நீதிமன்றத்தின் மூலம் நாங்கள் தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்