இதை கூடவா திருடுவார்கள்?: கொலை செய்யப்பட்ட பெண்ணுக்காக மேகன் கட்டிய ரிப்பன் திருட்டு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தென்னாப்பிரிக்காவில் தபால் அலுவலக ஊழியர் ஒருவரால் கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண் நினைவாக கட்டப்பட்ட ரிப்பன் ஒன்றை, யாரோ ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேப் டவுன் பல்கலைக்கழக மாணவியான Uyinene Mrwetyana (19) பார்சல் ஒன்றை வாங்குவதற்காக உள்ளூர் தபால நிலையத்திற்கு சென்றிருந்தார். ஆனால் அவரை ஏமாற்றி தபால் நிலையத்திற்குள் அழைத்துச் சென்ற ஒரு ஊழியர், Uyineneஐ சித்திரவதை செய்து, வன்புணர்வு செய்து பின்னர் தபால் நிலையத்திலுள்ள ஸ்கேலால் அடித்தே கொலை செய்திருக்கிறார்.

பின்னர் Khayelitsha என்ற இடத்தில் Uyineneஇன் உடலை வீசிச் சென்றிருக்கிறார் அவர்.

பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் மனைவி மேகனுடன் தென்னாப்பிரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றிருந்த நேரத்தில், இந்த விடயம்தான் அங்கு தலைப்புச் செய்தியாக இருந்திருக்கிறது.

Uyinene சித்திரவதை செய்யப்பட்டு, வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட விடயத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மேகன், ரகசியமாக அந்த இடத்திற்கு சென்று, அந்த பெண்ணுக்கு தனது அஞ்சலியை செலுத்தியிருக்கிறார்.

உணர்ச்சி வசப்பட்ட இளவரசி மேகன், மஞ்சள் நிற ரிப்பன் ஒன்றில் தனது கைப்பட, உங்கள் பிரச்சினையில் நாங்களும் உங்களுடன் இருக்கிறோம், ஹரி & மேகன், என்று எழுதி அந்த இடத்தில் கட்டி விட்டு திரும்பினார்.

ஆனால் தற்போது, அந்த ரிப்பனை யாரோ ஒருவர் திருடிச்சென்றுள்ளார். Uyineyeஇன் தாய் Noma, அந்த ரிப்பன் காணாமல் போனது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல, நாம் எப்படிப்பட்ட சமுதாயமாக மாறிவிட்டோம் என்பதையும் காட்டுகிறது என்றார்.

ராஜ குடும்பத்தவர்களின் ரசிகர்கள் யாரோதான், நினைவுப்பொருளாக, அந்த ரிப்பனை எடுத்துச் சென்றிருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ள, சம்பவம் நடந்த தபால் அலுவலக பணியாளர்கள், அவர்களது மனசாட்சியே அதை திரும்ப கொண்டுவந்து வைக்க செய்துவிடும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்