ஒப்பந்தம் ஏதுமற்ற Brexit... பிரித்தானியர்களுக்கு பேரிடியாக அமையும் அடுத்த விவகாரம்: எச்சரிக்கும் மருத்துவர்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் ஏதும் செய்து கொள்ளாமல் பிரித்தானியா வெளியேறுமானால் அது தற்போதைய சூழலில் பல மரணங்களுக்கு காரணமாக அமையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போதைய சூழலில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பிரித்தானிய அரசு பிடிவாதமாக எவ்வித ஒப்பந்தமும் இன்றி ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து வெளியேறும் என்றே நம்பப்படுகிறது.

இதனால் பிரித்தானிய மக்கள் பல வகையில் இன்னலுக்கு உள்ளாவார்கள் என ஒருசாரார் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்து வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என அப்போது வாக்களித்த பலரும் தற்போது ஏற்பட்டுள்ள இக்கெட்டான சூழலால் விழிபிதுங்கியுள்ளனர்.

இந்த நிலையிலேயே ஒப்பந்தம் ஏதுமற்ற Brexit என்பது மிகவும் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாட்டுக்கு வழிவகுக்கும் எனவும், இது பல மரணங்களுக்கு காரணமாக அமையும் எனவும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இருதய நோய் நிபுணரான Andrew Clark இந்த விவகாரம் தொடர்பில் உரியவர்களை ஏற்கெனவே எச்சரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் ஏதுமற்ற Brexit என்பது உண்மையில் பேரழிவிற்கு பக்கத்தில் செல்வதாகும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பிரித்தானியாவில் குளிர்க்காலம் நெருங்கி வருவதால், மருந்துகளுக்கு திடீர் தட்டுப்பாடு எழலாம் என கூறியுள்ள மருத்துவ நிபுணர்கள், அது கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு இட்டுச்செல்லும் என எச்சரிக்கின்றனர்.

மேலும், உறுப்புமாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்கள், தேவையான மருந்து தட்டுப்பாடால் கடும் சிக்கலுக்கு உள்ளாவார்கள் எனவும் எச்சரிக்கின்றனர்.

புற்றுநோய் பாதித்தவர்கள் உடனடியாக தேவையான் மருந்துகளை சேமித்து வைத்துக் கொள்ளும் வகையில் திட்டமிட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீரிழிவு நோய் தொடர்பில் பிரித்தானியாவில் மட்டும் கடந்த ஆண்டு 421,000 பேர் இன்சுலின் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் தற்போதே பல மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் உள்ளூர் பத்திரிகை ஒன்று விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்