குண்டுவெடிப்பில் தம்பி, தங்கையை இழந்த பிரித்தானியர்! இலங்கைக்கு வந்து செய்த நெகிழ்ச்சி செயல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தனது தம்பியையும் தங்கையையும் இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் பறிகொடுத்த பிரித்தானிய இளைஞர் ஒருவர், அவர்களது உயிர்த்தியாகங்கள் வீணாய்ப்போக விடமாட்டேன் என்கிறார்.

பாதிக்கப்பட்டவர்களுக்காக தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ள அவர், இலங்கைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து நிதியுதவியும் ஆறுதலும் அளித்து வருகிறார்.

தனது தம்பியையும் தங்கையையும் பறிகொடுத்தாலும், அவர்கள் நினைவாக அவர்கள் உயிரிழந்த இடத்திற்கே வந்து அவர் உதவுவது நெகிழச் செய்வதாக உள்ளது.

இலங்கையிலுள்ள ஷாங்ரி லா ஹொட்டலுக்கு சற்று தொலைவிலேயே நின்று, 15 வயது அமெலியும், 19 வயது டேனியலும் கொல்லப்பட்ட இடத்தை மனது வலிக்க பார்வையிடுகிறார் டேவிட் லின்சே (21).

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அந்த ஹொட்டலில் தந்தை மேத்யூவுடன் தங்கியிருந்த இருவரும், தந்தைக்கு இன்னும் கொஞ்சம் உணவை வாங்கி வருவதற்காக சென்றபோது, மனித வெடிகுண்டாக செயல்பட்ட ஒருவர் வெடி குண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததில், கோர மரணத்தை சந்தித்தார்கள் அவர்கள்.

தான் தனது தம்பியையும் தங்கையையும் பறிகொடுத்த அதே நாட்டில், இன்னும் பலர் தங்களுக்கு பிரியமானவர்களை இழந்து தவிக்கும் நிலையில் அவர்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு பறந்து வந்திருக்கிறார் டேவிட்.

Photo: Paul Cainer

அவரைக் கண்டதும், அவரது சகோதரரும் சகோதரியும் உயிரிழந்த அதே ஹொட்டலின் மேலாளரான பிரித்தானியர், அங்கேயே இலவசமாக தங்கிக்கொள்ளும்படி டேவிடை அழைக்க, அந்த ஹொட்டலுக்குள் செல்லும் தைரியம் தனக்கு இல்லை என்று கூறி நகரீகமாக மறுத்த டேவிட், தொலைவில் நின்றே கனத்த மனதுடன் அந்த ஹொட்டலை பார்வையிடுகிறார்.

இறந்தவர்களின் நினைவாக படங்களை மாட்டிவைத்தால் எதிர்காலத்தில் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை அது அசௌகரியமாக உணரவைக்கலாம் என்பதால் ஷாங்ரி லா ஹொட்டலில் இறந்த யாருடைய படங்களும் இல்லை.

தன்னைப்பொருத்தவரை, அது முக்கியமில்லை என்று கருதும் டேவிட், தன் தங்கையும் தம்பியும் என்றுமே தன் மனதில்தான் இருக்கிறார்கள், அவர்களுக்கு மரணமே இல்லை என்கிறார்.

ஆனால், அவர்கள் நினைவுகூறப்படவேண்டும், நான் உருவாக்கியுள்ள தொண்டு நிறுவனத்தின் மூலமாகவாவது அவர்கள் எப்போதும் நினைவுகூறப்படவேண்டும் என்கிறார் டேவிட்.

தனது Amelie and Daniel Linsey Foundation என்னும் தொண்டு நிறுவனம் மூலம் 250,000 பவுண்டுகள் சேகரித்துள்ள டேவிட் தொடர்ந்து நன்கொடைகள் கேட்டு வருகிறார்.

அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் வழங்கி வருகிறார் டேவிட்.

எனது குடும்பம் லண்டனில் பாதுகாப்பாக உள்ளது, எங்களுக்கு வீடும், வேலையும், கல்வியும் இருக்கின்றன என்று கூறும் டேவிட், ஆனால் இலங்கையில் தங்கள் வீட்டில் சம்பாதித்துக்கொண்டிருந்த ஒரே நபரை பல குடும்பங்கள் இழந்துள்ளன.

Photo: Paul Cainer

சுற்றுலாவை மட்டுமே நம்பி வாழ்ந்துவந்த பல குடும்பங்கள் எல்லாவற்றையும் இழந்து தவிக்கின்றன.

இன்னும் காயங்கள் ஆறாதவர்கள் மருத்துவமனைகளில் இருக்கிறார்கள், உடலிலும் மனதிலும் என்கிறார் டேவிட்.

இப்படி உதவுவது உங்கள் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கேட்டால், ஒரு விநாடி கூட தயங்காத டேவிட், இவை எனது வேதனையை கொஞ்சம் குறைப்பது உண்மைதான், ஆனால் நான் முழுமையாக இதிலிருந்து குணமடைவேனா என்று எனக்கே தெரியவில்லை என்கிறார்.

தான் சேகரித்த பணத்தை மிக கவனமாக விநியோகிக்கும் டேவிட், பாதிக்கப்பட்ட ஒரு 11 வயது சிறுமி இன்னமும் மருத்துவமனையில் இருப்பதையும் மிக மெதுவாகவே அவள் குணமடைந்துவருவதையும் நினைவு கூர்ந்தவராய், மருத்துவமனைகளுக்கு உதவுவதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்.

என்னால் முடிந்தவரை உதவ முயற்சி செய்வேன், அவைதான் என்னையும் குணமாக்கும் என்னும் டேவிட், தனது தேர்வுகள் முடிந்ததும், மீண்டும் இலங்கை வர இருப்பதாகவும், இன்னும் பெரிய அளவில் உதவ இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்